நெய்வேலி அருகே, வாலிபர் அடித்துக் கொலை - நண்பர்கள் 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை

நெய்வேலி அருகே வாலிபர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது நண்பர்கள் 3 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
நெய்வேலி அருகே, வாலிபர் அடித்துக் கொலை - நண்பர்கள் 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை
Published on

நெய்வேலி,

கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே உள்ள கொல்லிருப்பு காலனி அம்மன் கோவில் தெருவில் வசிப்பவர் முனியன். இவரது மகன் பிரகாஷ் (வயது 26). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த இவர், கடந்த ஒரு மாதமாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பிரகாஷ், அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர்கள் கார்த்திக், ராஜதுரை, சதிஷ்குமார் ஆகியோருடன் மது அருந்துவதற்காக நெய்வேலி 2ம் அனல்மின் நிலையம் அருகே உள்ள சாம்பல் ஏரிக்கு சென்றார். அங்கு அவர்கள் 4 பேரும் சாம்பல் ஏரி அருகில் அமர்ந்து மது அருந்தினர்.

அப்போது கார்த்திக், ராஜதுரை ஆகியோர் மீண்டும் மதுபாட்டில்கள் வாங்கி வருவதாக பிரகாசிடம் கூறிச்சென்றதாக தெரிகிறது. பிரகாஷ், சதிஷ்குமார் ஆகியோர் ஏரிக்கரையிலேயே காத்திருந்தனர். இந்நிலையில் கார்த்திக், ராஜதுரை ஆகியோர் மதுபாட்டில்கள் வாங்கிக் கொண்டு ஏரிக்கரைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

அந்த சமயத்தில் சதிஷ்குமார் பதறியடித்துக் கொண்டு ஓடி வந்தார். இதை பார்த்த கார்த்திக், அவரை தடுத்து நிறுத்தி விசாரித்தார். அப்போது அவர், மர்மநபர்கள் சிலர் பிரகாசை தாக்கி விட்டு தப்பி ஓடிவிட்டதாக கூறினார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள், விரைந்து சென்று பார்த்தனர். அப்போது பிரகாசின் நெற்றியில் இருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது.

உடனே கார்த்திக் உள்ளிட்ட 3 பேரும் அவரை மீட்டு சிகிச்சைக்காக மந்தாரக்குப்பத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே பிரகாஷ் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதற்கிடையே இதுபற்றி தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு லோகநாதன், நெய்வேலி தெர்மல் போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா, சப்-இன்ஸ்பெக்டர் சேகர் ஆகியோர் விரைந்து வந்து, பிரகாஷ் உடலை பார்வையிட்டு அவரது நண்பர்களிடம் விசாரணை நடத்தினர்.

பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே இதுபற்றி அறிந்த பிரகாசின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போலீஸ் நிலையத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் பிரகாஷ் கொலை செய்யப்பட்டது குறித்து உரிய விசாரணை நடத்தி, குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் அங்கிருந்த போலீசாரிடம் தெரிவித்தனர்.

இந்த நிலையில் முனியன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் சந்தேகத்தின் பேரில் கார்த்திக், ராஜதுரை, சதிஷ்குமார் ஆகியோரை பிடித்து, பிரகாஷ் கொலை செய்யப்பட்டது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நண்பர்களுடன் மது அருந்த சென்ற வாலிபர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com