

ஒட்டன்சத்திரம்,
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள அரசப்பபிள்ளைபட்டியை சேர்ந்தவர் வேலுச்சாமி (வயது 49). அவருடைய மனைவி கலைச்செல்வி. இவர் களுக்கிடையே குடும்ப பிரச்சினை தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் கோபித்து கொண்டு கலைச்செல்வி அதே பகுதியில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு வந்தார். நேற்று முன்தினம் கலைச்செல்வி அப் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது வேலுச்சாமி, மோட்டார் சைக்கிளில் வந்து கலைச்செல்வி மீது மோதியதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து தனது தந்தை கருப்பணகவுண்டரிடம் (65), கலைச்செல்வி தெரிவித்தார். இதனையடுத்து கருப்பணகவுண்டர், வேலுச்சாமியை தட்டி கேட்டார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த கருப்பணகவுண்டர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் வேலுச்சாமியை குத்த முயன்றார். ஆனால் சுதாரித்து கொண்ட வேலுச்சாமி, கத்தியை பிடுங்கி கருப்பணகவுண்டரை சரமாரியாக குத்திவிட்டு தப்பியோடினார்.
கத்திக்குத்தில் படுகாயம் அடைந்த கருப்பணகவுண்டரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கருப்பணகவுண்டர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஒட்டன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து. தப்பியோடிய வேலுச்சாமியை கைது செய்தனர். மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.