ஊட்டி ஸ்டீபன் ஆலயம் அருகே, நில அளவீடு செய்யாமல் கூடுதலாக மண் அகற்றம் - தடுப்புச்சுவர் கட்ட கோரிக்கை

ஊட்டி ஸ்டீபன் ஆலயம் அருகே நில அளவீடு செய்யாமல் கூடுதலாக மண் அகற்றப்பட்டது. எனவே அப்பகுதியில் தடுப்புச்சுவர் கட்ட கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
ஊட்டி ஸ்டீபன் ஆலயம் அருகே, நில அளவீடு செய்யாமல் கூடுதலாக மண் அகற்றம் - தடுப்புச்சுவர் கட்ட கோரிக்கை
Published on

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் கூடலூர்-ஊட்டி-குன்னூர் வழியாக மேட்டுப்பாளையத்துக்கு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் அந்த சாலையை விரிவாக்கம் செய்யும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. ஊட்டி பிங்கர்போஸ்ட் பகுதியில் இருந்து கலெக்டர் அலுவலக சந்திப்பு, சேரிங்கிராஸ், ஆவின், தலையாட்டுமந்து, லவ்டேல் சந்திப்பு, வேலிவியூ வழியாக பிக்கட்டி வரை சாலையை அகலப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.

தற்போது பிங்கர்போஸ்ட்டில் இருந்து கலெக்டர் அலுவலக சந்திப்பு வரை சாலையோரம் உள்ள மண் திட்டுகள் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டு, அப்பகுதியில் மண்சரிவு ஏற்படுவதை தடுக்க தடுப்புச்சுவர் கட்டப்பட்டு வருகிறது. பள்ளமாக இருந்தால் தடுப்புச்சுவர் கட்டி மண் நிரப்பப்படுகிறது. இந்த பணி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி, லவ்டேல் சந்திப்பு பகுதியிலும் நடந்து வருகிறது. தேசிய நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்வதற்காக ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

இந்த பணியை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்கள் சரியாக வரைபடத்தை பார்க்காமலும், நில அளவீடு செய்யாமலும் நூற்றாண்டு பழமை வாய்ந்த புனித ஸ்டீபன் ஆலயம் அருகில் அதிகளவில் மண்ணை அகற்றி உள்ளனர். இதுகுறித்து ஆலய நிர்வாகிகள் மாவட்ட கலெக்டரின் கவனத்துக்கு கொண்டு சென்றனர். பின்னர் நில அளவீடு செய்து பார்த்ததில் 2 அடி தூரம் மட்டும் மண் அகற்றப்பட வேண்டிய இடத்தில் கூடுதலாக 3 அடி(மொத்தம் 5 அடி) தூரத்துக்கு மண் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றி எடுக்கப்பட்டது தெரியவந்தது. இது பாரம்பரியம் மிக்க ஆலயம் என்பதால், உடனடியாக அந்த இடத்தில் தடுப்புச்சுவர் கட்டி மண் அகற்றப்பட்ட இடத்தில் மண் நிரப்ப வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:- சாலை அகலப்படுத்தும் பணியின்போது தேசிய நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்கள் சம்பந்தப்பட்ட இடத்தில் இருந்து மேற்பார்வை செய்ய வேண்டும். அவ்வாறு இல்லாததால் ஒப்பந்த பணியாளர்கள் பொக்லைன் எந்திரத்தை தாறுமாறாக இயக்கி சாலையோரத்தில் உள்ள செப்டிக் டேங்க் போன்றவற்றை இடிப்பதால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். தற்போது தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ளதால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட முடியாத நிலை உள்ளது. எனவே சாலை விரிவாக்க பணிகளை முறையாக செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com