ஓட்டப்பிடாரம் அருகே, ரூ.30 லட்சம் செலவில் சமுதாய நலக்கூடம் - கனிமொழி எம்.பி. அடிக்கல் நாட்டினார்

ஓட்டப்பிடாரம் அருகே ரூ.30 லட்சம் செலவில் சமுதாய நலக்கூடம் அமைப்பதற்கு கனிமொழி எம்.பி. அடிக்கல் நாட்டினார்.
ஓட்டப்பிடாரம் அருகே, ரூ.30 லட்சம் செலவில் சமுதாய நலக்கூடம் - கனிமொழி எம்.பி. அடிக்கல் நாட்டினார்
Published on

ஓட்டப்பிடாரம்,

ஓட்டப்பிடாரம் அருகே உள்ள சக்கரம்பட்டியில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.30 லட்சம் செலவில் சமுதாய நலக்கூடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது.

தி.மு.க வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் முன்னிலை வகித்தார். தி.மு.க கிழக்கு ஒன்றிய செயலாளரும் யூனியன் துணைத்தலைவருமான காசிவிசுவநாதன் வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு சமுதாய நலக்கூடத்துக்கு அடிக்கல் நாட்டி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க அதிகமான இடங்களில் வெற்றி பெற்று உள்ளது. தி.மு.க.வினர் மக்களை சந்தித்து குறைகளை போக்கக்கூடியவர்கள். கலைஞர் வழியில் வரக்கூடியவர்கள். சொன்னது தான் செய்வார்கள் செய்வதைத்தான் சொல்வார்கள். இங்கு உள்ள அமைச்சரும், அரசும் மக்களைப்பற்றி கவலைப்படுவது இல்லை. குறுக்குச்சாலையில் தி.மு.க. சார்பில் நடந்த கிராமசபை கூட்டத்தில் பொதுமக்கள் குறுக்குச்சாலையில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று குறுக்குச்சாலை மட்டுமல்ல எப்போதும் வென்றான், மேலக்கரந்தை, மடத்தூர், கோரம்பள்ளம் ஆகிய இடங்களில் மேம்பாலம் அமைக்க மத்திய அமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. அந்த கோரிக்கைகள் பரிசீலனை செய்யப்பட்டு அதற்கான அடிப்படை பணிகள் நடந்து வருகிறது. விரைவில் மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் பஞ்சாயத்து தலைவர்கள் முனியம்மாள் (குறுக்குச்சாலை), முத்துக்குமார் (எப்போதும்வென்றான்) உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com