

நெய்க்காரப்பட்டி,
பழனி அருகே பாப்பம்பட்டி, காவலப்பட்டி, கரடிக்கூட்டம், வேலாயுதம்பாளையம்புதூர், அக்கமநாயக்கன்புதூர், ஆண்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2 ஆயிரம் ஏக்கரில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த மழையை நம்பி விவசாயிகள் மக்காச்சோளம் சாகுபடி செய்தனர். இதில் அதிக அளவு படைப்புழு தாக்குதலால் விளைச்சல் பாதிப்புக்குள்ளானது. இதையடுத்து விவசாயிகள் பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து பயிரை பாதுகாத்து வந்தனர். மேலும் போதிய அளவு மழை பெய்யாததாலும் செடிகள் வாடி வந்தன.
இதற்கிடையே தற்போது கதிர்கள் வந்துள்ள நிலையில், காட்டுப்பன்றிகள் அட்டகாசம் அதிகரித்துள்ளது. குறிப்பாக இரவு நேரங்களில் கூட்டமாக வரும் பன்றிகள் வயலுக்குள் புகுந்து மக்காச்சோள கதிரை தின்பதுடன் பயிர்களை நாசப்படுத்தி செல்கின்றன. நேற்று முன்தினம் இரவு வேலாயுதம்பாளையம்புதூரை சேர்ந்த விவசாயிகள் முத்துச்சாமி, தங்கவேல், செல்வராஜ், செல்லமுத்து, முருகானந்தம் ஆகியோரின் தோட்டத்திற்குள் புகுந்த காட்டுப்பன்றிகள் சுமார் 3 ஏக்கரில் பயிரிட்டிருந்த மக்காச்சோள பயிர்களை சேதப்படுத்தி சென்றன.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ஏற்கனவே வடகிழக்கு பருவமழை போதிய அளவில் பெய்யாத நிலையில் கிணறுகளில் உள்ள குறைந்த அளவு நீரை கொண்டு மக்காச்சோள பயிரை காப்பாற்றி வந்தோம். இந்தநிலையில் படைப்புழு தாக்குதல், பூச்சி நோய் ஆகியவற்றாலும் விளைச்சல் பாதிப்புக்குள்ளானது. தற்போது காட்டுப்பன்றிகள் அட்டகாசத்தால் பெரும் கவலையில் உள்ளோம். இரவு நேரங்களில் அவை கூட்டமாக வருகின்றன. விரட்டினாலும் செல்வதில்லை. சில நேரங்களில் தோட்டங்களில் குட்டிகளுடன் வரும்போது விரட்டினால் கடிக்க வருகின்றன. இதனால் நாய்களுடன் சென்றுதான் அவற்றை விரட்டி வருகிறோம். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் காட்டுப்பன்றிகளின் அட்டகாசத்தை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.