பழனி அருகே ஜல்லிக்கட்டு காளைகளுடன் மல்லுக்கட்டிய காளையர்கள் 27 பேர் காயம்

பழனி அருகே பெரியகலையம்புத்தூரில் நடந்த ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகளுடன் காளையர்கள் மல்லுக்கட்டினர். காளைகள் முட்டியதில் 27 பேர் காயம் அடைந்தனர்.
பழனி அருகே ஜல்லிக்கட்டு காளைகளுடன் மல்லுக்கட்டிய காளையர்கள் 27 பேர் காயம்
Published on

நெய்க்காரப்பட்டி,

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே நெய்க்காரப்பட்டியை அடுத்த பெரியகலையம்புத்தூர் ஐகோர்ட்டு பத்ரகாளியம்மன் கோவில் நிர்வாகம் சார்பில், பொங்கல் விழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டு பொங்கல் விழாவையொட்டி நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதற்கு பழனி சப்-கலெக்டர் அசோகன் தலைமை தாங்கினார். பழனி தொகுதி எம்.எல்.ஏ. இ.பெ.செந்தில்குமார் கொடி அசைத்து ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தார்.

பழனி போலீஸ் துணை சூப்பிரண்டு சிவா, தாசில்தார் வடிவேல்முருகன், பழனி கால்நடை மண்டல இணை இயக்குனர் முருகன், நெய்க்காரப்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஜல்லிக்கட்டில் மதுரை, கோவை, தேனி, திண்டுக்கல் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து 512 காளைகள் பங்கேற்றன. முன்னதாக அனைத்து காளைகளுக்கும் கால்நடைத்துறை டாக்டர்களால் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

இதேபோல் காளைகளை அடக்க வந்த 300 வீரர்களுக்கும் கொரோனா மற்றும் உடல் பரிசோதனை செய்யப்பட்டு சீருடைகள் வழங்கப்பட்டன. பின்னர் அவர்கள் ஒரு சுற்றுக்கு 50 பேர் வீதம் களம் இறக்கப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து வாடிவாசல் வழியாக ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டன. சீறிப்பாய்ந்த காளைகளை அங்கு தயாராக இருந்த காளையர்கள் அதன் திமிலை பிடித்து அடக்கினர். சில காளைகள் முட்டி தூக்கி வீசி பந்தாடியது. இதில் வீரர்கள் சிலர் கீழே விழுந்து காயமடைந்தனர்.

ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்க காளையர்கள் மல்லுக்கட்டிய காட்சி பார்வையாளர்களை கவர்ந்தது. காளைகள் பந்தாடியதில் 27 பேர் காயம் அடைந்தனர். இவர்களுக்கு அங்கு தயாராக இருந்த மருத்துவ குழுவினர் உடனடியாக முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

காளைகளை அடக்கியவர்களுக்கு பீரோ, கட்டில், செல்போன், மின்விசிறி, தங்க நாணயம், வெள்ளி நாணயம், ஆடு போன்றவை பரிசாக வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகளை ஐகோர்ட்டு பத்திரகாளியம்மன் கோவில் விழா குழுவினர் செய்து இருந்தனர். ஜல்லிக்கட்டையொட்டி 250-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com