பள்ளிப்பட்டு அருகே, வீட்டை சுற்றி முள்வேலி அமைத்து 6 பேர் சிறை வைப்பு - 50 பேருக்கு போலீஸ் வலைவீச்சு

பள்ளிப்பட்டு அருகே பட்டா நிலத்தை கிராமத்தினருக்கு தர மறுத்ததால், 10 ஆண்டுகளாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டனர். இந்த நிலையில் அவர்கள் வீட்டை சுற்றி முள்வேலி போட்டு சிறை வைத்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் உள்பட 50 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
பள்ளிப்பட்டு அருகே, வீட்டை சுற்றி முள்வேலி அமைத்து 6 பேர் சிறை வைப்பு - 50 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
Published on

பள்ளிப்பட்டு,

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே வெளிகரம் பழைய காலனியில் வசித்து வருபவர் முத்து (வயது 75). இவர் தனது மனைவி தேசம்மாள் (65), மகன்கள் நாகராஜ் (36), தேவன் (31), மருமகள் சிலம்பரசி (32), பேத்தி மதுமிதா (3) ஆகியோருடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் 10 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு சொந்தமான பட்டா நிலத்தை அந்த கிராமத்தினர் கேட்டபோது முத்து தர மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த 10 ஆண்டுகளாக அந்த கிராமத்தினர் இவரது குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாக தெரிகிறது.

இதைத்தொடர்ந்து, அந்த இடத்தை தனது மகன் நாகராஜுக்கு, முத்து எழுதிக்கொடுத்து விட்டார்.

இதையடுத்து கடந்த 2013-ம் ஆண்டு அந்த இடத்தில் ஊராட்சி செலவில் சிமெண்ட் சாலை போடப்பட்டது. அதற்கு நாகராஜ் எதிர்ப்பு தெரிவித்தும் ஊராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை.

50 பேருக்கு வலைவீச்சு

இதற்கிடையே அந்த நிலத்தின் வழியாக சவ ஊர்வலம் செல்லவும், சாமி ஊர்வலம் செல்லவும் நாகராஜ் அனுமதி மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் உள்ளிட்ட 50 பேர் நேற்று நாகராஜ் வீட்டைச்சுற்றி முள்வேலி அமைத்து, அவர்களை வீட்டில் இருந்து வெளியே செல்ல முடியாதபடி சிறை வைத்ததாக கூறப்படுகிறது.

இதனால் முதியவர்களான முத்து, தேசம்மாள் உள்பட 6 பேரும் வெளியே எங்கும் செல்ல முடியாமல் வீட்டிற்குள்ளேயே அவதிப்பட்டனர். இந்த நிலையில் முள்வேலியை அகற்றி அங்கிருந்து தப்பிவந்த நாகராஜ் பள்ளிப்பட்டு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன், மோகன்ராஜ் (40) உள்பட 50 பேரை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com