பண்ருட்டி அருகே பயங்கரம் வாலிபர் அடித்துக் கொலை போலீசார் விசாரணை

பண்ருட்டி அருகே வாலிபர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த பயங்கர சம்பவம் குறித்த விவரம் வருமாறு.
பண்ருட்டி அருகே பயங்கரம் வாலிபர் அடித்துக் கொலை போலீசார் விசாரணை
Published on

கடலூர்,

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள திருவதிகை எடப்பாளையம் தெருவை சேர்ந்தவர் பரமசிவம். இவரது மகன் சாந்தகுமார் (வயது 22). இவரும் அதே பகுதியை சேர்ந்த பெரியசாமி மகன் சக்திவேல்(25) என்பவரும் நண்பர்கள் ஆவர். சக்திவேல் அதே பகுதியை சேர்ந்த 21 வயதான கல்லூரி மாணவி ஒருவரை காதலித்து வந்ததாக தெரிகிறது.

மேலும் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அந்த மாணவியுடன் அவர், உல்லாசம் அனுபவித்து விட்டு திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த மாணவி கொடுத்த புகாரின் பேரில், பண்ருட்டி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சக்திவேலை கடந்த 2-ந் தேதி கைது செய்தனர்.

இந்த நிலையில் நேற்று இரவு சாந்தகுமார், அதே பகுதியில் உள்ள பஸ் நிறுத்தம் அருகில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கல்லூரி மாணவியின் அண்ணனான ஞானவேல் என்பவர், சாந்தகுமாரிடம், சக்திவேலின் காதலுக்கு நீ தானே உடந்தையாக இருந்தாய் என கூறி அவருடன் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த ஞானவேல் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சேர்ந்து சாந்தகுமாரை பயங்கர ஆயுதங்களால் தாக்கினர். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், சாந்தகுமாரை மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சாந்தகுமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு பாபுபிரசாந்த், இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் மற்றும் போலீசார் தலைமறைவாக உள்ள ஞானவேல் மற்றும் அவரது ஆதரவாளர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பண்ருட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com