பரமத்திவேலூர் அருகே: வங்கியில் போலி நகைகளை அடகுவைத்து ரூ.1.56 கோடி மோசடி - மேலாளர் உள்பட 2 பேர் கைது

பரமத்திவேலூர் அருகே வங்கியில் போலி நகைகளை அடகுவைத்து ரூ.1 கோடியே 56 லட்சம் மோசடி செய்யப்பட்ட வழக்கில் உடந்தையாக இருந்த கிளை மேலாளர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
பரமத்திவேலூர் அருகே: வங்கியில் போலி நகைகளை அடகுவைத்து ரூ.1.56 கோடி மோசடி - மேலாளர் உள்பட 2 பேர் கைது
Published on

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பிலிக்கல்பாளையத்தில் தனியார் வங்கியின் கிளை செயல்பட்டு வருகிறது. அந்த வங்கியில் ஈரோடு மண்டல மேலாளர் வினோத் சந்திரன் கடந்த 23-ந் தேதி ஆவணங்களையும், நகைகளையும் தணிக்கை செய்தார்.

அப்போது வங்கியில் பணிபுரிந்த பொத்தனூரை சேர்ந்த நகை மதிப்பீட்டாளர் ராஜேந்திரன் வங்கிக்கு நகை கடன் பெறவரும் வாடிக்கையாளர்களின் பெயர்களில் போலியான நகைகளை அடகு வைத்து ரூ.1 கோடியே 56 லட்சத்து 75 ஆயிரத்து 115-ஐ மோசடி செய்து இருப்பதும், அதற்கு வங்கியின் துணை மேலாளர் கரூர் வடக்கு காந்திகிராமம் பகுதியை சேர்ந்த வாசுதேவன் (வயது 57), வங்கி மேலாளர் மதுரை டி.கல்லுபட்டியை சேர்ந்த சுரேஷ் (32) ஆகியோர் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது.

இவர்கள் உள்ளூர் வாடிக்கையாளர்களின் பெயரில் கவரிங் நகைகளை தங்க நகைகள் போல் அடகு வைத்து, வங்கியை ஏமாற்றி பணம் பெற்று மோசடி செய்து இருப்பதாக நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசுவிடம் வங்கி அதிகாரிகள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு இது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், வங்கியில் பணிபுரிந்த நகை மதிப்பீட்டாளர் ராஜேந்திரன், பல வாடிக்கையாளர்களை தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு கவரிங் நகைகளை தங்க நகைகள் போல் அவர்கள் பெயரில் வங்கியில் அடமானம் வைத்து மோசடி செய்து பணம் பெற்று பல தொழில்களில் முதலீடு செய்து இருப்பது தெரியவந்தது.

மேலும் கடந்த ஜனவரி மாதம் 5-ந் தேதி வங்கி மண்டல அலுவலகத்தில் இருந்து வந்த நகை மதிப்பீட்டாளர்கள் சோதனையின் போது, லாக்கரில் இருந்த கவரிங் நகைகளை மாற்றிவிட்டு தங்க நகைகளை வைத்து சோதனைக்கு கொடுத்ததாகவும், மீண்டும் கடந்த 19-ந் தேதி தணிக்கை செய்தபோது போலி நகைகள் கண்டுபிடிக்கப்பட்டதும் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து பணம் மோசடிக்கு உடந்தையாக இருந்த வங்கி மேலாளர் சுரேஷ், துணை மேலாளர் வாசுதேவன் ஆகிய இருவரையும் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள வங்கி நகை மதிப்பீட்டாளர் ராஜேந்திரனை தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய நபர்களின் விவரங்களையும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்த வழக்கில் விரைந்து நடவடிக்கை எடுத்த குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு மணிமாறன், போலீஸ் இன்ஸ்பெக்டர் கோமதி மற்றும் தனிப்படையினரை போலீஸ் சூப்பிரண்டு பாராட்டினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com