பேரணாம்பட்டு அருகே பத்தலப்பல்லி அணையில் குளிக்க சென்ற மாணவர் தண்ணீரில் மூழ்கினார் கதி என்ன? தேடும் பணி தீவிரம்

பேரணாம்பட்டு அருகே பத்தலப்பல்லி அணையில் குளிக்கச் சென்ற மாணவர் தண்ணீரில் மூழ்கினார். அவரின் கதி என்னவென்று தெரிய வில்லை. தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
பேரணாம்பட்டு அருகே பத்தலப்பல்லி அணையில் குளிக்க சென்ற மாணவர் தண்ணீரில் மூழ்கினார் கதி என்ன? தேடும் பணி தீவிரம்
Published on

பேரணாம்பட்டு,

பேரணாம்பட்டு டவுன் ரஷீதாபாத் பகுதியைச் சேர்ந்தவர் இர்ஷாத் அஹம்மத். இவரின் மகன் மாஸ் (வயது 16). பேரணாம்பட்டில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்த அவர், அதில் தேர்ச்சி பெற்று 11-ம் வகுப்பில் சேர விண்ணப்பித்திருந்தார். நேற்று மாலை மாஸ் அதே பகுதியைச் சேர்ந்த தனது நண்பர்கள் 10 பேருடன் பேரணாம்பட்டு அருகே பத்தலப்பல்லி மலட்டாற்றில் மழைவெள்ளம் ஓடியதைப் பார்க்க சென்றார்.

பின்னர் பத்தலப்பல்லி அணைத்திட்ட பகுதியில் தேங்கி உள்ள 20 அடி ஆழ தண்ணீரில் மாஸ் தனது நண்பர்களுடன் விளையாடி குளித்துக் கொண்டிருந்தபோது, பலத்த மழை பெய்தது. அப்போது எதிர்பாராவிதமாக மாஸ் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார். நண்பர்கள் காப்பாற்ற முயன்றும் ஆழமான பகுதியில் சென்று விட்டார்.

இதுகுறித்து அங்கிருந்த பொதுமக்கள் பேரணாம்பட்டு போலீஸ் நிலையத்துக்கும், தீயணைப்புப்படையினருக்கும் தகவல் தெரிவித்தனர். சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன், பேரணாம்பட்டு தீயணைப்புப்படையினர் பொதுமக்கள் உதவியோடு இரவு 8 மணியில் இருந்து 11 மணிவரை 3 மணி நேரம் தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அவரின் கதி என்னவென்று தெரியவில்லை.

இப்பகுதியில் பலத்த மழை பெய்ததாலும், இருள் சூழ்ந்ததாலும் மாசை மீட்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, பாதியில் திரும்பினர். மீண்டும் நாளை (அதாவது இன்று காலை) மீட்புப்பணியை மேற்கொள்ளலாம் எனப் போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. எனினும், மகனை காணாதது கண்டு பெற்றோர், உறவினர்கள் கதறி அழுதனர்.

பத்தலப்பல்லி அணை திட்டப்பணி நீதிமன்ற விசாரணையில் உள்ளது. அணை திட்டப்பணி தற்போது நிறுத்தப்பட்டுள்ளதால், அணை திட்ட பகுதியில் 20 அடி ஆழத்துக்கு தண்ணீர் உள்ளது. அங்கு, யாரும் சென்று குளிக்க கூடாது, ஆபத்தான பகுதி என எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது. அதை மீறி ஆறு மற்றும் அருகில் உள்ள விவசாய நிலங்கள் வழியாகச் சென்று அணை திட்ட பகுதியில் பள்ளி சிறுவர்கள் கூட்டம் கூட்டமாக சென்று குளிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

கடந்த பல ஆண்டுகளாக அங்கு இவ்வாறு சிறுவர்கள் குளிக்கும்போது, நீரில் அடித்துச் செல்லப்பட்டு ஆழமான இடத்தில் சேறு, சகதியில் சிக்கி பலர் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளனர். உயிரிழப்புகள் ஏற்படுவதை தவிர்க்க யாரும் நுழையாதவாறு இரும்புத்தடுப்பு வேலிகள் அமைத்து, கண்காணிக்க வேண்டும், எனச் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com