பெரியபாளையம் அருகே கொசஸ்தலை ஆற்றில் மூழ்கி அண்ணன்-தம்பி பலி

பொங்கல் பண்டிகை கொண்டாட பாட்டி வீட்டுக்கு வந்த போது, கொசஸ்தலை ஆற்றில் குளிக்க சென்ற அண்ணன்-தம்பி நீரில் மூழ்கி பலியாயினர்.
பெரியபாளையம் அருகே கொசஸ்தலை ஆற்றில் மூழ்கி அண்ணன்-தம்பி பலி
Published on

பெரியபாளையம்,

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் அருகே சேத்துப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன் நாயுடு. இவரது மகன் லோகேஷ். கொத்தனார் வேலை செய்து வருகிறார். லோகேசுக்கு திருமணமாகி ஜெயலட்சுமி என்ற மனைவியும், 10-ம் வகுப்பு படிக்கும் ஜெயச்சந்திரன் (16), 8-ம் வகுப்பு படிக்கும் மனோஜ்குமார்(14) ஆகிய மகன்கள் உண்டு.

லோகேஷ் பூந்தமல்லி அருகே உள்ள பாப்பன்சத்திரம் கிராமத்தில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்நிலையில், பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக ஜெயச்சந்திரன் மற்றும் மனோஜ்குமார் சேத்துப்பாக்கத்தில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு வந்திருந்தனர்.

இந்த நிலையில் அண்ணன், தம்பிகளான இருவரும் நேற்று மதியம் அங்குள்ள கொசஸ்தலை ஆற்றில் குளித்து கொண்டிருந்தனர். இவர்களுக்கு நீச்சல் தெரியாதநிலையில், அதிக வேகத்தில் சென்ற ஆற்று நீரில் இருவரும் அடித்து செல்லப்பட்டனர்.

மேலும் 2 பேரும் ஆழமான பகுதியில் சிக்கிக் கொண்டதால் மூச்சுத்திணறி உயிருக்குப் போராடினர். உடனே காப்பாற்றுங்கள்!காப்பாற்றுங்கள்! என்று கூக்குரலிட்டனர்.

இதைப் பார்த்த அக்கிராமத்தைச் சேர்ந்த சிலர் தண்ணீரில் குதித்து சிறுவர்களை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அதற்குள் அவர்கள் இருவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக பலியாயினர்.

இதையடுத்து, மூழ்கி கிடந்த சிறுவர்களின் உடலை பொதுமக்கள் மீட்டு, கரைக்கு கொண்டு வந்தனர். தகவல் அறிந்த வெங்கல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சிறுவர்களின் உடலை கைப்பற்றி திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். பொங்கல் பண்டிகைக்கு பாட்டி வீட்டிற்கு வந்த 2 சிறுவர்களும் ஆற்றில் அடித்து சென்று பலியான சம்பவம் அப்பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com