பொன்னேரி அருகே மீன் வளக்கல்லூரி மாணவ-மாணவிகள் போராட்டம்

பொன்னேரி அருகே மீன் வளக்கல்லூரி மாணவ- மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொன்னேரி அருகே மீன் வளக்கல்லூரி மாணவ-மாணவிகள் போராட்டம்
Published on

பொன்னேரி,

பொன்னேரியை அடுத்த வேண்பாக்கத்தில் டாக்டர் எம்.ஜி.ஆர். அரசு மீன்வளக்கல்லூரி உள்ளது. இங்கு 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று காலை கல்லூரிக்கு வந்த மாணவ-மாணவிகள் வகுப்பறைக்கு செல்லாமல் திடீரென உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடி பகுதியில் புதிதாக சுயநிதி மீன்வளக்கல்லூரி தொடங்க அனுமதி அளித்து இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் புதிய கல்லூரிக்கு அனுமதி அளிக்ககூடாது என்று கோஷங்கள் எழுப்பினர். பதாகைகளையும் கையில் ஏந்தி இருந்தனர்.

இது குறித்து மாணவ-மாணவிகள் கூறியதாவது:-

தமிழகத்தில் ஏற்கனவே தூத்துக்குடி, நாகை, பொன்னேரி போன்ற இடங்களில் அரசு மீன் வளக்கல்லூரி உள்ளது. தற்போது கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடியில் புதிதாக சுயநிதி மீன் வளக்கல்லூரிக்கு அனுமதி அளித்து மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

இங்கு மாணவர்கள் கலந்தாய்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படாமல், பணத்தை மூலதனமாக கொண்டு நேரடியாக சேர்க்கப்படுகின்றனர்.

இதன் மூலம் கல்வியின் தரம் பாதிக்கப்படுகிறது. திறமையான பட்டதாரிகள் உருவாவது கேள்விக்குறியாகிறது. இந்த கல்லூரியை தொடங்குவதன் மூலம், ஏழை-எளிய மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும். இந்த கல்லூரியை தடை செய்யக்கோரி, இளங்கலை இறுதி ஆண்டு மாணவர்கள் 11 பேர் மீன்வளத்துறை செயலாளர், பல்கலைக்கழக பதிவாளர் மற்றும் துணை வேந்தருக்கு கடிதம் அனுப்பினர்.

இதனை ஏற்று கொள்ளாத பல்கலைக்கழக நிர்வாகம் முதல்வர் மற்றும் விடுதி காப்பாளர் மூலம் இடையூறு செய்தது. அவர்களை விடுதியை விட்டு 6 மாத காலம் இடைநீக்கம் செய்து கல்லூரியின் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

சுயநிதி கல்லூரியை தடை செய்யக்கோரியும் முறையான காரணம் இன்றி இடைநீக்கம் செய்யப்பட்ட 11 பேரின் இடைநீக்க ஆணையை திரும்ப பெற வலியுறுத்தியும் போராட்டம் நடத்துகிறோம். நாங்கள் வெற்றி பெறும் வரை போராட்டம் தொடரும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com