

பூந்தமல்லி,
பூந்தமல்லி, நசரத்பேட்டை, திருவேற்காடு, சென்னீர்குப்பம் போன்ற பகுதிகளில் ஏராளமானோர் மாடுகளை வளர்த்து, பால் வியாபாரம் செய்து வருகின்றனர். இதில் சிலரது மாடுகள் இரவு நேரங்களில் சாலையோரங்களிலும், சுற்றுவட்டார பகுதிகளிலும் சுற்றித்திரிவது வழக்கம். இவ்வாறு செல்லும் மாடுகள் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மாயமாகி வந்தன. அவை தானாக காணாமல் போயிருக்கலாம் என நினைத்து போலீசில் புகார் எதுவும் செய்யப்படவில்லை.
கடந்த வாரம் நசரத்பேட்டையில் சுற்றித்திரிந்த மாடுகளை லோடு வேனில் திருடிச்சென்ற வாலிபர்களை பொதுமக்கள் மடக்கி பிடித்து நசரத்பேட்டை போலீசில் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்துக்கு பின்னர்தான் மாடுகள் திருடப்படுவது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மாடுகளின் உரிமையாளர்கள் மற்றும் வாலிபர்கள் மோட்டார் சைக்கிள்களில் இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பூந்தமல்லி பகுதியில் ஒரு மினிலாரி மாடுகள் இருக்கும் இடங்களில் சற்று நேரம் நின்றுவிட்டு பின்னர் கிளம்பி சென்றது. இதனால் சந்தேகம் அடைந்த ரோந்து பொதுமக்கள் அந்த மினிலாரியை பின் தொடர்ந்தனர். அப்போது அதில் ஒரு மாடு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அந்த மினிலாரியை அவர்கள் நிறுத்த முயற்சி செய்தனர். ஆனால் அது நிற்காமல் வேகமாக சென்றது. எனினும் பொதுமக்கள் விரட்டி சென்று மினி லாரியின் முன் பகுதியில் தங்களது மோட்டார் சைக்கிளை போட்டனர். அதன் மீது ஏறிய மினிலாரி சிறிது தூரம் மோட்டார் சைக்கிளை இழுத்து சென்றது. அதற்கு மேல் செல்ல முடியாததால் மினிலாரியை நிறுத்தி விட்டு அதில் இருந்தவர்கள் இறங்கி ஓடினார்கள்.
உடனே அவர்களை பொதுமக்கள் விரட்டிச்சென்று பிடிக்க முயன்றனர். அதில் ஒருவன் மட்டும் பொதுமக்களிடம் சிக்கினான். மற்றவர்கள் தப்பியோடினர். சிக்கிய நபர் வட மாநிலத்தை சேர்ந்த கரீப் (வயது 35), என்பது தெரியவந்தது.
இதையடுத்து பொதுமக்கள் அவனுக்கு தர்ம அடி கொடுத்து பூந்தமல்லி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். பொதுமக்கள் தாக்கியதில் காயமடைந்த கரீப் சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறான். மேலும் கடத்த முயன்ற மாடு மற்றும் மினிலாரியும் மீட்டு போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.
அந்த மினிலாரியில் உருட்டுக்கட்டைகள், பெரிய அளவிலான கற்கள், கத்திகள், இரும்பு பைப்புகள் போன்றவை வைக்கப்பட்டு இருந்தது. அவை மாடு திருட்டை தடுக்க முயல்வோரை தாக்குவதற்காக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் போலீசார், தப்பியோடிய மற்ற நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இது குறித்து பூந்தமல்லி வட்டார பொதுமக்கள் கூறுகையில், எங்கள் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட மாடுகள் காணாமல் போய் உள்ளன. இரவு நேரங்களில் வாலிபர்கள் ஒன்று திரண்டு ரோந்து பணியில் ஈடுபட்டதால்தான் இந்த கும்பலை கண்டுபிடிக்க முடிந்தது. கொஞ்சம் தவறி இருந்தால் எங்களையும் அவர்கள் கொன்று இருப்பார்கள். இதுபோன்ற திருட்டுகளை தடுப்பதற்கு, இரவு நேரங்களில் வந்து செல்லும் வட மாநில பதிவு எண் கொண்ட வாகனங்களை போலீசார் மடக்கி விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
மினி லாரியில் மாடு திருடிய கும்பலை பொதுமக்கள் விரட்டிச்சென்று மாட்டை மீட்டது பூந்தமல்லி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.