புதுப்பேட்டை அருகே, தென்பெண்ணையாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணி தீவிரம்

புதுப்பேட்டை அருகே தென்பெண்ணையாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
புதுப்பேட்டை அருகே, தென்பெண்ணையாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணி தீவிரம்
Published on

புதுப்பேட்டை,

கர்நாடக மாநிலம் நந்தி மலையில் இருந்து உற்பத்தியாகும் தென்பெண்ணையாறு, தமிழகத்தில் பல்வேறு மாவட்டஙகள் வழியாக பாய்ந்தோடி வந்து இறுதியாக கடலூர் அருகே வங்கக்கடலில் சங்கமித்து வருகிறது. கடலூர் மாவட்டத்தை பொறுத்தவரை புதுப்பேட்டை, பண்ருட்டி, நெல்லிக்குப்பம் வழியாக கடலூருக்கு பாய்ந்தோடி வருகிறது.

மழைக்காலங்களில் தென்பெண்ணையாறு வழியாக வரும் தண்ணீர் வீணாக கடலில் கலப்பதால், நீரை நம்பி இருந்த விவசாயிகள் குறைந்த அளவிலேயே பயனடைந்து பயிர் செய்து வருகின்றனர். தற்போது நிலவிய வறட்சியால் விவசாய பணி முற்றிலும் பாதிக்கப்பட்டது.

இதுபோன்ற நிலையில் வீணாக கடலில் கலக்கும் இந்த நீரை சேமித்து, பாசனத்திற்காக உபயோகிக்கும் வகையில் தென் பெண்ணையாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

இதையேற்று அதிகாரிகள் தடுப்பணை கட்ட முடிவு செய்தனர். அதன்படி கடலூர் மாவட்டம் புதுப்பேட்டை அருகே உள்ள எனதிரிமங்கலம்- விழுப்புரம் மாவட்டம் தளவானூரை இணைக்கும் வகையில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே ரூ.25 கோடியே 35 லட்சம் செலவில் தடுப்பணை கட்ட முடிவு செய்யப்பட்டு, இதற்கான பணிகளும் தொடங்கப்பட்டது.

இந்த பணிகள் அனைத்தும் தீவிரமாக நடைபெற்று, தற்போது இறுதி கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்த தடுப்பணையின் மூலம் அந்த பகுதியில் உள்ள சுமார் 2 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசனம் வசதி பெறுவதுடன், சுற்றிலும் உள்ள கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து குடிநீருக்கும் கைக்கொடுக்கும் என்கின்றனர் பொதுப்பணித்துறை அதிகாரிகள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com