ராயக்கோட்டை அருகே தரைப்பாலம் அமையும் இடத்தை கலெக்டர் நேரில் ஆய்வு

ராயக்கோட்டை அருகே ரெயில்வே தரைப்பாலம் அமைய உள்ள இடத்தை கலெக்டர் பிரபாகர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ராயக்கோட்டை அருகே தரைப்பாலம் அமையும் இடத்தை கலெக்டர் நேரில் ஆய்வு
Published on

ராயக்கோட்டை,
ராயக்கோட்டை ஊராட்சி குரும்பட்டி, திம்மராயன்கொட்டாய், காளிகான்கொட்டாய் ஆகிய பகுதிகளில் சுமார் 350 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. கோழிப்பண்ணையும் அதிக அளவில் உள்ளன. விவசாயிகள், காய்கறி உள்ளிட்ட விளைப்பொருட்களையும், பண்ணையாளர்கள் கோழிகளுக்கு தேவையான தீவனம் ஆகியவற்றை வாகனங்களில் ரெயில்பாதையை கடந்து எடுத்து செல்கின்றனர். மேலும் பள்ளி, கல்லூரி வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் இந்த வழியாக அதிக அளவில் சென்று வருகின்றன. இதனால் வாகனங்களில் செல்லும் விவசாயிகள், பொதுமக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இதனால் இந்த பகுதியில் ரெயில்வே பாதைக்கு கீழ் பகுதியில் தரைப்பாலம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து அந்த பகுதியில் தரைப்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த பகுதியில் தரைப்பாலம் அமைத்தால் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கும். இதனால் வாகனங்கள், பொதுமக்கள் செல்ல முடியாத நிலை ஏற்படும். இந்த பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் மற்றும் ரெயில்வே அதிகாரிகள், அமைச்சர், எம்.எல்.ஏ. ஆகியோரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர். இதையடுத்து கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் பிரபாகர் குரும்பட்டிக்கு நேரில் சென்று ரெயில்வே தரைப்பாலம் அமைய உள்ள இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் அவர் பொதுமக்களிடம் குறைகள் கேட்டு அறிந்தார். அப்போது ரெயில்வே பாதையில் மேம்பாலம் அமைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கலெக்டர் தெரிவித்தார். இந்த ஆய்வின் போது உதவி கலெக்டர் விமல்ராஜ், தாசில்தார் வெங்கடேசன், வட்டார வளர்ச்சி அலுவலர் தேவராஜ், ஒன்றிய பணி மேற்பார்வையாளர் லட்சுமணன் மற்றும் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன், கூட்டுறவு கடன் சங்க தலைவர் புருசப்பன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com