ராசிபுரம் அருகே மக்கள் தொடர்பு திட்ட முகாம்: ரூ.38.21 லட்சம் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் ஆசியா மரியம் வழங்கினார்

ராசிபுரம் அருகே நடந்த மக்கள் தொடர்பு திட்ட முகாமில் ரூ.38 லட்சத்து 21 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் வழங்கினார்.
ராசிபுரம் அருகே மக்கள் தொடர்பு திட்ட முகாம்: ரூ.38.21 லட்சம் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் ஆசியா மரியம் வழங்கினார்
Published on

ராசிபுரம்,

ராசிபுரம் அருகேயுள்ள மெட்டாலா கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடந்தது. இந்த முகாமிற்கு நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் தலைமை தாங்கினார். முகாமில் முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆணை உள்பட 118 பயனாளிகளுக்கு ரூ.38 லட்சத்து 21 ஆயிரத்து 916 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஆசியா மரியம் வழங்கினார். பின்னர் அவர் பேசும்போது கூறியதாவது:-

தொலைதூர கிராம மக்களும் அரசின் திட்டங்கள் மற்றும் சேவைகளை அறிந்து பயன்பெற வேண்டும் என்பதற்காகவும், அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை மக்கள் தெரிந்துகொள்ளவும் மக்கள் தொடர்பு முகாம் நடத்தப்படுகிறது. மாவட்டத்தில் 90 சதவீதம் மக்கள் விவசாயத்தை நம்பி உள்ளனர். விவசாயிகளுக்கு வேளாண் கருவிகள், இடு பொருட்கள், விதைகள், மரக்கன்றுகள், சொட்டு நீர்ப்பாசனம் அமைக்க 100 சதவீத மானியம் உள்ளிட்ட ஏராளமான நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு வழங்கி வருகிறது.

மாவட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள பல்வேறு நடவடிக்கை காரணமாக தற்போது மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் தாக்கம் இல்லாமல் உள்ளது. பொதுமக்கள் எந்தவித சிரமமும் இன்றி தங்களுக்கு தேவையான வருமான சான்றிதழ்கள், முதல் பட்டதாரி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்களையும் வருவாய்த்துறையின் சார்பில் இருக்கும் இடத்தில் இருந்தே பெறும் வகையில் இணைய தளம் மூலம் இ.சேவை மையங்களின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. மாவட்ட வழங்கல் துறையின் சார்பில் மின்னணு குடும்ப அட்டை வழங்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

முகாமில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்ற கலெக்டர் அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

முகாமில் நாமக்கல் சப்-கலெக்டர் கிராந்தி குமார் பதி, தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) துரை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அதிகாரி கண்ணன், மாவட்ட வழங்கல் அலுவலர் பர்கத் பேகம், ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் சாந்தி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் பத்மாவதி, மாற்றுத் திறனாளிகள் அலுவலர் ஜெகதீசன், ராசிபுரம் தாசில்தார் சாகுல் அமீது, முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் இ.கே.பொன்னுசாமி, முன்னாள் எம்.எல்.ஏ. கலாவதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com