

உசிலம்பட்டி,
சேடபட்டி அருகே உள்ள அணைக்கரைப்பட்டியைச் சேர்ந்த கன்னியப்பன் என்பவரது மகன் ரமேஷ் (வயது 22). கல்லூரி மாணவரான இவர் போலீஸ் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அங்குள்ள மலைப்பகுதியில் தூக்கில் பிணமாக தொங்கினார்.
இந்த சம்பவம் தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 4 போலீசார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று இரவு ரமேசின் மரணத்திற்கு நீதி வழங்கக்கோரி தமிழர் விடுதலை கழகத்தைச் சேர்ந்த வக்கீல் ராஜ்குமார் தலைமையில் கிராம மக்கள் அணைக்கரைப்பட்டியில் உள்ள சாவடி முன்பு அமர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும், ரமேசின் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக அறிவிக்கும் வரை போராட்டம் தொடரும் என்று கிராம மக்கள் தெரிவித்தனர். மள்ளர் பாதுகாப்பு பேரவை, மனித உரிமைகள் பாதுகாப்பு அமைப்பினரும் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். நேற்று நள்ளிரவிலும் போராட்டம் நீடித்தது.