சங்ககிரி அருகே, மாமியாரை கொன்ற மருமகன் கைது - பரபரப்பு வாக்குமூலம்

சங்ககிரி அருகே மாமியாரை கொன்ற மருமகனை போலீசார் கைது செய்தனர். போலீசாரிடம் அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.
சங்ககிரி அருகே, மாமியாரை கொன்ற மருமகன் கைது - பரபரப்பு வாக்குமூலம்
Published on

சங்ககிரி,

சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே மோரூர் மேற்கு ஊராட்சிக்கு உட்பட்ட புள்ளிபாளையம் கிராமம் பாப்பாங்காடு பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (வயது 58). இவருடைய மனைவி பேபி (55). இவர்களில் சண்முகம் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.

இந்நிலையில் கடந்த மாதம் 22-ந் தேதி, பேபியை அவரது மகள் தீபாவின் 2-வது கணவரான, வேலூர் மாவட்டம், துரைப்பாடி பகுதியை சேர்ந்த கணபதி (36) என்பவர் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டார். இது குறித்து சங்ககிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பிஓடிய கணபதியை தேடி வந்தனர்.

நேற்று முன்தினம் புள்ளிபாளையம் பகுதியில் உள்ள மனைவியை பார்க்க கணபதி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு வந்த போலீசார் கணபதியை கைது செய்தனர். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புள்ளிபாளையத்தை சேர்ந்த தீபாவின் முதல் கணவரான கள்ளக்குறிச்சியை சேர்ந்த நடராஜன் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். அதன்பிறகு அவர்களுக்கு பிறந்த 2 மகள்களுடன் தீபா தனது பெற்றோருடன் வசித்து வந்தார்.

அவரை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நான் திருமணம் செய்து கொண்டேன். பின்னர் நான் எனது மனைவி மற்றும் அவருடைய குழந்தைகளுடன் திருச்செங்கோடு அருகே புளியம்பட்டியில் வாடகை வீட்டில் வசித்து வந்தோம்.

எனக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால் எங்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இ்தனால் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு எனது மனைவி என்னை பிரிந்து குழந்தைகளுடன் புள்ளிபாளையத்தில் உள்ள அவரது அம்மா பேபி வீட்டுக்கு சென்று விட்டார். பலமுறை அவரை குடும்பம் நடத்த வரும்படி அழைத்தும் மறுத்து விட்டார்.

இந்த நிலையில் கடந்த மாதம் 22-ந் தேதி பிற்பகல் 3 மணியளவில் நான், புள்ளிபாளையத்தில் உள்ள மாமியார் வீட்டுக்கு மறுபடியும் சென்றேன். அவர் எனது மனைவி மற்றும் குழந்தைகளை என்னுடன் அனுப்ப மறுத்தார். மேலும், உன்னை திருமணம் செய்ததால் தான் எனது மகள் வாழ்க்கையே போய் விட்டது. உன்னோடு என் மகள் எந்த காலத்திலும் சேர்ந்து வாழ வரமாட்டாள் என்று திட்டவட்டமாக அவர் கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த நான், மாமியாரை தீர்த்து கட்டினால் தான் எனது மனைவியுடன் சேர்ந்து வாழ முடியும் என்று நினைத்தேன். அதன்பின்னர் எனது மனைவி தீபாவிடம் நடந்த விவரங்களை மாமியார் பேபி கூறி விட்டார்.

அதை பொருட்படுத்த வேண்டாம் என்று கூறிவிட்டு தீபா அன்று இரவு மில்வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் எனது மாமியாரும், குழந்தைகளும் மட்டும் இருந்ததை தெரிந்து கொண்டேன்.

நள்ளிரவு 1.30 மணியளவில் நான், மாமியார் வீட்டுக்கு சென்றேன். அங்கு நான் கதவை தட்டியவுடன் எனது மாமியார் கதவை திறந்தார். அப்போது மாமியாரை தள்ளிவிட்டு வீட்டுக்குள் சென்று, அவரை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு தப்பி ஓடினேன்.

பின்னர் திருத்தணிக்கு சென்று மொட்டை போட்டு விட்டு திருப்பதிக்கு சென்று தலைமறைவாக இருந்தேன். புள்ளிபாளையத்தில் உள்ள எனது மனைவியை பார்க்க ஈரோடு ரெயிலில் ஊருக்கு வந்தேன். அங்கிருந்து புள்ளிபாளையம் வந்த போது போலீசார் என்னை மடக்கி பிடித்து விட்டனர்.

இவ்வாறு அவர் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com