

சாயர்புரம்,
தூத்துக்குடி அருகே உள்ள சாயர்புரம் குமாரபுரத்தை சேர்ந்தவர் நவமணி. இவருடைய மனைவி குளோரிடா (வயது 45). இவர் ஸ்ரீவைகுண்டம் யூனியன் அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். நவமணி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.
குளோரிடா தனது மொபட்டில் சாயர்புரம் பஜாருக்கு சென்று அங்கு இருந்து பஸ்சில் ஸ்ரீவைகுண்டம் செல்வார். பின்னர் இரவு ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து சாயர்புரம் வந்து அங்கு நிறுத்தப்பட்டு இருக்கும் தனது மொபட்டில் வீட்டிற்கு திரும்புவது வழக்கம்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வேலையை முடித்து விட்டு குளோரிடா இரவு 7.45 மணிக்கு சாயர்புரம் பஜாருக்கு வந்தார். பின்னர் அங்கு இருந்து தனது மொபட்டில் வீட்டுக்கு புறப்பட்டார். மொபட் சாயர்புரம் பஜாரில் இருந்து குமாரபுரம் செல்லும் வழியில் மெயின் ரோட்டில் சென்ற போது, அங்கு மோட்டார் சைக்கிளில் 2 மர்ம நபர்கள் வந்தனர். அவர்கள் திடீரென்று குளோரிடா கழுத்தில் கிடந்த 6 பவுன் தங்க சங்கிலியை பறிக்க முயன்றனர். ஆனால் அவர் அதனை தனது கைகளால் இறுக்கி பிடித்து கொண்டார். இதனால் மர்ம நபர்கள் குளோரிடாவை தாக்கிவிட்டு அங்கு இருந்து தப்பி சென்று விட்டனர்.
இதில் படுகாயம் அடைந்த குளோரிடா தூத்துக்குடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து சாயர்புரம் போலீசார் விசாரணை நடத்தி, மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.