சீர்காழி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; நிறைமாத கர்ப்பிணி உள்பட 3 பேர் பலி

சீர்காழி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் நிறைமாத கர்ப்பிணி உள்பட 3 பேர் பலியானார்கள். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சீர்காழி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; நிறைமாத கர்ப்பிணி உள்பட 3 பேர் பலி
Published on

சீர்காழி,

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே கிடாய் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரகாசு மகன் புருஷோத்தமன்(வயது 35). விவசாயியான இவருக்கும் சீர்காழி அருகே உள்ள கன்னியாகுடி கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகள் தமிழ்வாணிக்கும்(30) கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இந்த தம்பதிக்கு ஏற்கனவே ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் தமிழ்வாணி மீண்டும் கர்ப்பம் அடைந்தார். தற்போது அவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். பிரசவத்துக்காக தமிழ்வாணி கன்னியாகுடி கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்து இருந்தார்.

இந்த நிலையில் கன்னியாகுடி கிராமத்தில் இருந்து நேற்று மதியம் புருஷாத்தமன் தனது மனைவியை மருத்துவ பரிசோதனைக்காக வைதீஸ்வரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு மோட்டார் சைக்கிளில் அழைத்து வந்தார்.

மருத்துவ பரிசோதனை செய்த பின்பு மீண்டும் தனது மோட்டார் சைக்கிளில் மனைவியை அழைத்துக்கொண்டு வீடு திரும்பினார். கற்கோயில் குளம் அருகில் அவர்கள் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த கார் எதிர்பாராதவிதமாக புருஷோத்தமன் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இந்த விபத்தில் நிறைமாத கர்ப்பிணியான தமிழ்வாணியும், அவரது கணவர் புருஷோத்தமனும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயங்களோடு சம்பவ இடத்திலேயே துடி, துடித்து உயிரிழந்தனர்.

தொடர்ந்து வேகமாக சென்ற கார் 100 நாள் வேலையை முடித்து விட்டு சாலையோரம் நடந்து சென்ற உடையாம்பாளையம் கிராமத்தை சேர்ந்த பொன்னையன் மனைவி தையல்நாயகி(52), சந்திரகாசு மனைவி ராணி(60) ஆகியோர் மீது மோதியது.

இதில் இருவரும் பலத்த காயம் அடைந்தனர் இதனையடுத்து காரை விபத்து நடந்த இடத்திலேயே நிறுத்தி விட்டு டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். விபத்தை நேரில் கண்ட அந்த பகுதி மக்கள் விபத்து நடந்த இடத்துக்கு ஓடி வந்து கார் மோதியதில் காயம் அடைந்த தையல்நாயகி, ராணி ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் வழியிலேயே தையல்நாயகி பரிதாபமாக உயிரிழந்தார். ராணி மேல்சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

டிரைவரின் அஜாக்கிரதையால் தறிகெட்டு ஓடி வந்த கார் மோதிய விபத்தில் நிறைமாத கர்ப்பிணி, அவரது கணவர் மற்றும் மூதாட்டி உள்ளிட்ட 3 உயிர்கள் பறிபோன சம்பவம் அந்த பகுதி மக்களிடையே மிகுந்த ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி மக்கள் விபத்தை ஏற்படுத்திய காரை அடித்து நொறுக்கி குளத்திற்குள் தள்ளி விட்டனர். பின்னர் கிராம மக்கள் விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கக்கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த உதவி கலெக்டர் நாராயணன், போலீஸ் துணை சூப்பிரண்டுகள் லாமேக், வசந்தராஜ், போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) ஜெயந்தி, சீர்காழி தாசில்தார் சண்முகம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து விபத்தில் உயிரிழந்த புருஷோத்தமன், நிறைமாத கர்ப்பிணி தமிழ்வாணி ஆகிய இருவரின் உடல்களையும் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வைத்தீஸ்வரன் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய கார் டிரைவர் வைத்தீஸ்வரன் கோவில் அருகே உள்ள கொண்டத்தூர் கிராமம் வைத்தியநாதபுரம் மெயின்ரோட்டை சேர்ந்த மதியழகன் மகன் அருண் குமாரை(32) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சாலைமறியல் போராட்டம் காரணமாக சீர்காழி-மணல்மேடு சாலையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com