ஸ்ரீபெரும்புதூர் அருகே தங்கும் விடுதியில் விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் சாவு

ஸ்ரீபெரும்புதூர் அருகே தங்கும் விடுதி கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கியதில் 3 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஸ்ரீபெரும்புதூர் அருகே தங்கும் விடுதியில் விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் சாவு
Published on

ஸ்ரீபெரும்புதூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த போந்தூர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான தங்கும் விடுதி உள்ளது. இந்த பகுதியில் ஏராளமான தொழிற்சாலைகள் இயங்கி வருவதால் வெளியூர்களில் இருந்து வந்து செல்லும் அதிகாரிகள், இந்த விடுதியில் தங்கி செல்வது வழக்கம். இந்த விடுதியில் உள்ள கழிவுநீர் தொட்டி கடந்த சில நாட்களாக நிரம்பி வழிந்தது.

எனவே அதை சுத்தம் செய்வதற்காக நேற்று தொழிலாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டனர். அதன்படி சென்னை பட்டாபிராம் அருகே உள்ள நெமிலிச்சேரி பகுதியை சேர்ந்த முருகேசன் (வயது 43), மாரிமுத்து (வயது 32), சிவா (44), சங்கீதராஜ் (43), திருநாவுக்கரசு (40) ஆகிய 5 பேர் தொட்டியை சுத்தம் செய்ய வந்தனர்.

முதலில் தொட்டியில் இருந்து மோட்டார் மூலம் கழிவுநீர் வெளியேற்றப்பட்டது. பின்னர் தொழிலாளர்கள் 5 பேரும் தொட்டிக்குள் இறங்கி அதை சுத்தம் செய்யத்தொடங்கினர். அப்போது திடீரென தொட்டியில் இருந்து விஷவாயு கசிந்தது. இதை சுவாசித்த தொழிலாளர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

எனவே சிவா, சங்கீதராஜ், திருநாவுக்கரசு ஆகிய 3 பேரும் தொட்டியை விட்டு மேலே வந்தனர். ஆனால் மாரிமுத்து, முருகேசன் ஆகிய இருவரும் தொட்டிக்குள்ளேயே மயங்கி விழுந்தனர். அவர்களை காப்பாற்றுமாறு தொட்டிக்கு மேலே வந்த தொழிலாளர்கள் சத்தம் போட்டனர்.

உடனே அந்த விடுதியில் பிளம்பராக வேலை பார்த்து வந்த சோமங்கலம் மேலாத்தூர் பகுதியை சேர்ந்த ரவி (34) என்பவர் அங்கு விரைந்து வந்தார். அவர் தொட்டிக்குள் இறங்கி மாரிமுத்து மற்றும் முருகேசன் ஆகியோரை மீட்க முயன்றார். ஆனால் அவரும் அந்த விஷவாயு தாக்கி அங்கேயே மயங்கி விழுந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த விடுதி நிர்வாகத்தினர் ஸ்ரீபெரும்புதூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். ஆனால் அதற்குள் தொட்டிக்குள் இருந்த 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பின்னர் தொட்டிக்கு மேலே வந்திருந்த 3 தொழிலாளர்களையும் சிகிச்சைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு பொதுமருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் உயிரிழந்த தொழிலாளர்கள் 3 பேரின் உடலும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன.

இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சம்பவம் தொடர்பாக விடுதி மேலாளர் பத்மகுமார், என்ஜினீயர் பெருமாள் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்தை காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் எஸ்.பி. சந்தோஷ் ஹதிமானியும் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com