சூலூர் அருகே டிரைவரை கத்தியால் குத்தி விட்டு கார் கடத்தல்; சினிமா பாணியில் விரட்டி சென்று மடக்கி பிடித்த திருப்பூர் போலீசார்

சூலூர் அருகே அதிகாலையில் கால் டாக்சி டிரைவரை கத்தியால் குத்தி விட்டு காரை கடத்தி சென்றவர்களை திருப்பூர் போலீசார் சினிமா பாணியில் துரத்தி சென்று மடக்கி பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சூலூர் அருகே டிரைவரை கத்தியால் குத்தி விட்டு கார் கடத்தல்; சினிமா பாணியில் விரட்டி சென்று மடக்கி பிடித்த திருப்பூர் போலீசார்
Published on

திருப்பூர்,

கோவை சிங்காநல்லூர் இடையன்வலசு பகுதியை சேர்ந்தவர் வசந்தகுமார் (வயது 35). இவர் கால் டாக்சி ஓட்டி வருகிறார். இந்த நிலையில் வசந்தகுமார் சூலூர் அருகே தனது காரை நிறுத்தி வைத்திருந்தார். அப்போது, நேற்று அதிகாலை 2 மணிக்கு அங்கு வந்த 2 வாலிபர்கள் நாங்கள் மதுரைக்கு செல்ல வாடகைக்கு கார் வேண்டும் என்று கூறியுள்ளனர். இதையடுத்து அந்த 2 வாலிபர்களையும், வசந்தகுமார் தனது காரில் அழைத்து கொண்டு மதுரை நோக்கி சென்றார். திருச்சி ரோடு டி.இ.எல்.சி. தேவாலயம் அருகே கார் சென்றபோது, அங்குள்ள ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க வேண்டும் என்றும், எனவே காரை நிறுத்தும்படி காரில் பயணம் செய்த வாலிபர்கள், டிரைவர் வசந்தகுமாரிடம் கூறினர்.

இதையடுத்து காரை, வசந்தகுமார் நிறுத்தியுள்ளார். உடனே காரில் இருந்த வாலிபர்களில் ஒருவர் பணம் எடுக்க செல்வது போல, காரைவிட்டு கீழே இறங்கி சென்றுள்ளார். அப்போது காரில் இருந்த மற்றொரு வாலிபர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் டிரைவர் வசந்தகுமாரை குத்தியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சலிட்டுள்ளார்.

ஆனால் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி என்பதால் யாருக்கும் வசந்தகுமாரின் அலறல் சத்தம் கேட்கவில்லை. ரத்தம் பீறிட்டு வெளியேறிய நிலையில் காரில் சரிந்த அவரை அந்த வாலிபர்கள் கீழே தள்ளிவிட்டு, காரை அங்கிருந்து கடத்திச் சென்றனர்.

இதனால் சுதாரித்து கொண்ட வசந்தகுமார், கத்திக்குத்து காயங்களுடன் வலியால் துடித்தாலும், தான் வைத்திருந்த செல்போன் மூலம் நடந்த சம்பவத்தை உடனடியாக கோவை மாவட்ட போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து போலீசார் கோவை மாவட்ட அனைத்து சோதனை சாவடிகளுக்கும், திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்ட போலீஸ் கட்டுப்பாட்டு அறைக் கும் தகவல் கொடுத்தனர். இதையடுத்து காரை கடத்தி சென்றவர்களை கண்டுபிடிக்க திருப்பூர் உதவி கமிஷனர்(மத்திய குற்றப்பிரிவு) சுந்தரராஜன் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷீலா தலைமையில் போலீசார் கொண்ட தனிக்குழு ரோந்து பணியில் ஈடுபட்டனர். மேலும், இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கும் இதுகுறித்து தகவல் கொடுக்கப்பட்டது.

அப்போது திருப்பூரில் இருந்து தாராபுரம் செல்லும் ரோட்டில் உள்ள சந்திராபுரம் சோதனை சாவடியில் போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் இருந்து தெரிவிக்கப்பட்ட அந்த குறிப்பிட்ட பதிவு எண் கொண்ட கார் வந்து கொண்டிருந்தது. இதைப்பார்த்ததும் அங்கு பணியில் இருந்த போலீசார் அந்த காரை நிறுத்தும் படி சைகை காட்டினார்கள். ஆனால் கார் நிற்காமல் வேகமாக சென்றது. இதையடுத்து ரோந்து பணியில் இருந்த திருப்பூர் தெற்கு போலீசார் இருசக்கர வாகனத்தில் அந்த காரை துரத்தி சென்றனர். அப்போது அந்த கார் வேகமாக காங்கேயம் ரோட்டில் திருப்பூர் ஊரக போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிக்கு சென்றது. இதையடுத்து திருப்பூர் தெற்கு போலீசார், ஊரக போலீஸ் நிலையத்திற்கும், காங்கேயம் சோதனை சாவடியில் உள்ள போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர்.

அங்கு தயார் நிலையில் நின்று கொண்டிருந்த போலீசாரும் அந்த காரை நிறுத்த முயற்சித்தனர். அங்கும் காரை நிறுத்தாமல் அந்த நபர்கள் வேகமாக ஓட்டி சென்றனர். இதைத்தொடர்ந்து திருப்பூர் தெற்கு மற்றும் ஊரக போலீசாரும் இணைந்து ரோந்து வாகனத்தில் அந்த காரை துரத்தினார்கள். சினிமா பாணியில் அந்த காரை துரத்தி சென்ற போலீசார் விஜயாபுரம் நல்லிக்கவுண்டன்நகர் பகுதியில் வைத்து மடக்கி பிடித்தனர். அப்போது அந்த கார் நிலைதடுமாறி ரோட்டின் தடுப்பு சுவரில் மோதியது. இதையடுத்து போலீசார் அவர்களை சுற்றி வளைத்தனர்.

போலீசாரை பார்த்ததும், காரில் இருந்த 2 வாலிபர்களும் கதவை திறந்து ஓட்டம் பிடித்தனர். அவர்களை போலீசார் துரத்தினார்கள். அதில் ஒரு வாலிபர் மட்டும் பிடிபட்டார். மற்றொருவர் தப்பி ஓடிவிட்டார். போலீசாரிடம் சிக்கிய வாலிபரை, போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அந்த வாலிபர் அந்தமான் நிகோபார் தீவை சேர்ந்த திருமுருகன்(வயது 19) என்றும், தப்பி ஓடியவரும் அதே தீவை சேர்ந்த கொங்குசாமி(25) என்பதும் தெரியவந்தது.

பிடிபட்ட திருமுருகன் மற்றும் அவருடைய நண்பரும் எதற்காக காரை கடத்தினார்கள்? இவர்கள் இருவரும் வேறு ஏதேனும் குற்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனரா? என்பது குறித்தும், தப்பி ஓடியவர் குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதையடுத்து திருமுருகன் சூலூர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

கார் கடத்தப்பட்ட தகவல் கிடைத்தவுடன் துரிதமாக செயல்பட்டு 2 மணி நேரத்தில் காரை கடத்தி சென்றவரை பிடித்து காரையும் கைப்பற்றிய ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த துணை கமிஷனர் சுந்தரராஜன், தெற்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ஷீலா மற்றும் ஏட்டு, போலீசார் ஆகியோரின் பணியை பாராட்டி அவர்களுக்கு பரிசு தொகை வழங்க மாநகர போலீஸ் கமிஷனர் சஞ்சய்குமார் உத்தரவிட்டார். அப்போது துணை கமிஷனர் உமா உடன் இருந்தார். திருப்பூரில் அதிகாலை நேரம் சினிமா காட்சிகளை மிஞ்சும் அளவுக்கு நடைபெற்ற இந்த சம்பவம் அந்த பகுதி பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com