தட்டார்மடம் அருகே தி.மு.க. சார்பில் 1,000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் கனிமொழி எம்.பி. வழங்கினார்

தட்டார்மடம் அருகே தி.மு.க. சார்பில் 1,000 பேருக்கு நலத்திட்ட உதவிகளை கனிமொழி எம்.பி. வழங்கினார்.
தட்டார்மடம் அருகே தி.மு.க. சார்பில் 1,000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் கனிமொழி எம்.பி. வழங்கினார்
Published on

தட்டார்மடம்,

தட்டார்மடம் அருகே அரசூர் பஞ்சாயத்து இடைச்சிவிளையில் தி.மு.க. சார்பில் ஊராட்சி கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. அரசூர் பஞ்சாயத்து தலைவர் தினேஷ் ராஜசிங் தலைமை தாங்கினார். தி.மு.க. தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். பொதுக்குழு உறுப்பினர் இந்திராகாசி வரவேற்று பேசினார்.

விழாவில் கனிமொழி எம்.பி. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு 1,000 ஏழைகளுக்கு தலா 5 கிலோ அரிசி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் கனிமொழி எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது.

மகாத்மா காந்தி பிறந்த நாளில், கிராமசபை கூட்டம் நடத்தினால் விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்மானங்களாக நிறைவேற்றுவார்கள் என்று பயந்த தமிழக அரசு, கிராம சபை கூட்டங்களையே ரத்து செய்துள்ளது. எனவே கிராமசபை கூட்டங்களை தி.மு.க. கூட்டங்களாக நடத்திட தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டு கொண்டதின்பேரில், தமிழகம் முழுவதும் இதுபோன்ற கூட்டங்களை நடத்தி, விவசாய வாழ்வாதாரத்துக்கு எதிரான சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வேளாண் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, மத்திய அரசின் கூட்டணியில் அங்கம் வகித்த அகாலிதளம் கட்சியைச் சேர்ந்த மத்திய மந்திரியே ராஜினாமா செய்துள்ளார் என்பது நாட்டு மக்களுக்கு தெரியும். பெரிய வணிக நிறுவனங்களிடம் விவசாயிகளை ஒப்படைக்கும் வகையில், மத்திய அரசு வேளாண் சட்டத்தை கொண்டு வந்துள்ளது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில், மத்திய மாநில அரசுகள் செயல்பட்டு வருகிறது. மத்திய அரசின் பினாமி போன்று தமிழக அரசு செயல்படுகிறது. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் நேரம் நெருங்கி கொண்டிருக்கிறது.

ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தால், எதிர்காலத்தில் ரேஷன் கடைகளில் எந்த பொருட்களும் கிடைக்காத நிலை ஏற்படும். வெளி சந்தையில்தான் அதிக விலைக்கு பொருட்களை வாங்க நேரிடும். விவசாயிகள், ஏழைகள் ஆகியோருக்கு எதிராக செயல்படும் மத்திய, மாநில அரசுகளை ஒரு போதும் மன்னிக்க மாட்டார்கள். தமிழகத்தில் விரைவில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நல்லாட்சி மலரும். அப்போது பொதுமக்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் விவசாயிகள் நலன்களை பாதிக்கும் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் பில்லா ஜெகன், மாநில மாணவரணி துணை செயலாளர் உமரிசங்கர், மாவட்ட அவைத்தலைவர் அருணாசலம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், ஆழ்வார்திருநகரி யூனியன் தலைவர் ஜனகர், பொதுக்குழு உறுப்பினர் பசுபதி, வெள்ளூர் பஞ்சாயத்து தலைவர் குமார் பாண்டியன், பனைவிளை ராஜபாண்டி, அரசூர் பஞ்சாயத்து தி.மு.க. உறுப்பினர்கள் ஜோயல், அதிசயராஜ், ஜெயசிங், பூவுடையார்புரம் செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர். சாத்தான்குளம் தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் பாலமுருகன் நன்றி கூறினார்.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில், கோவில்பட்டி அருகே இலுப்பையூரணியில் மக்கள் குறைகேட்பு கூட்டம் நடந்தது. வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, கிராம மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் முருகேசன், பஞ்சாயத்து தலைவர் செல்வி சந்தனம், விவசாய அணி மாவட்ட அமைப்பாளர் ராமர், துணை அமைப்பாளர் சந்தனம், பொதுக்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com