

பாகூர்,
தவளக்குப்பம் அடுத்த பெரிய காட்டுப்பாளையம் கிராமத்தில் பழமைவாய்ந்த முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலை புதுப்பிக்கும் வகையில் திருப்பணிகள் தொடங்க திட்டமிடப்பட்டது. இதையடுத்து ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் கோவில் திருப்பணி நடந்து வருகிறது. இன்னும் சில மாதங்களில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில் நேற்று முன்தினம் திடீரென இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கி கோவில் ராஜகோபுரத்தின் ஒரு பகுதி சேதமடைந்தது. கோபுரத்தில் இருந்த சாமி சிலைகள் உடைந்தன. நேற்று காலை கோவிலுக்கு வந்து இதைப்பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கோவில் அறங்காவலர் குழுவினர் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
திருபுவனை பகுதியில் இரவு 8 மணி அளவில் இடி, மின்னலுடன் மழை பெய்தது. சுமார் அரை மணி நேரம் இந்த மழை நீடித்தது. குறிப்பாக திருபுவனை, திருண்டார் கோவில், மதகடிப்பட்டு, செல்லிப்பட்டு, சோரப்பட்டு ஆகிய பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.