குளித்தலை அருகே இருதரப்பினர் இடையே மோதல்; 5 பேர் கைது வேனின் கண்ணாடி உடைப்பு

குளித்தலை அருகே இருதரப்பினர்இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த மோதலில் வேனின் கண்ணாடி உடைக்கப்பட்டது.
குளித்தலை அருகே இருதரப்பினர் இடையே மோதல்; 5 பேர் கைது வேனின் கண்ணாடி உடைப்பு
Published on

குளித்தலை,

வ.உ.சிதம்பரனாரின் பிறந்தநாளையொட்டி, கரூர் மாவட்டம் மாயனூர், லாலாபேட்டை உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த பலர், குளித்தலை அருகே தாளியாம்பட்டியில் உள்ள வ.உ.சி சிலைக்கு நேற்று மதியம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் திருச்சிக்கு செல்வதற்காக குளித்தலை அருகே உள்ள கீழகுட்டப்பட்டி பகுதி வழியாக வாகனங்களில் சென்றுகொண்டிருந்தனர்.

அப்போது அவர்கள் வாகனத்தில் கட்டப்பட்டிருந்த கொடி, அந்த வழியாகச்சென்ற கீழகுட்டப்பட்டியைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்பவர் மீது பட்டு அவர் கீழே விழுந்தார். இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கேட்டபோது, மாயனூர் காட்டூர் பகுதியைச் சேர்ந்த பழனிகுமார் (வயது 29) என்பவர் தனது மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த பெரிய வாளால் அவர்களை வெட்டி காயப்படுத்தினாராம்.

இதனையடுத்து இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இருதரப்பினரும் இரும்பு கம்பி, கட்டை உள்ளிட்டவற்றால் தாக்கிக்கொண்டனர். இதில் வ.உ.சி.பேரவையைச் சேர்ந்தவர்கள் வந்த வேனின் கண்ணாடிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் அடித்து நொறுக்கப்பட்டது.

இந்த மோதலில் காயம் அடைந்த கீழகுட்டப்பட்டியைச் சேர்ந்த செல்வராஜ் (55), தேவா (24), குமரேசன் (29), மாயனூர் சந்தபேட்டையைச் சேர்ந்த முத்துமணி (24), கோவக்குளம் பகுதியைச் சேர்ந்த மகுடேஸ்வரன் (35), காட்டூர் பகுதியைச் சேர்ந்த பழனிகுமார் (24) ஆகிய 6 பேரும், சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த குளித்தலை போலீஸ் துணை சூப்பிரண்டு சசீதர் மற்றும் குளித்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர்.

மேலும் அந்த பகுதியில் அசம்பாவித சம்பவங்கள் ஏதேனும் நடைபெறாமல் இருப்பதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இந்த மோதல் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்வதில் காலதாமதம் ஏற்பட்டது. இந்தநிலையில் மாலையில் மற்றொரு சமூகத்தின் கூட்டமைப்பைச் சேர்ந்த அதன் தலைவர், செயலாளர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் உள்பட பலர் குளித்தலை போலீஸ் நிலையத்திற்கு வந்தனர். பின்னர் தங்கள் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்களை தாக்கியவர்கள்மீது சட்டரீதியாக போலீசார் வழக்கு தொடரவேண்டும். கைது செய்துவைத்துள்ள தங்கள் கூட்டமைப்பை சேர்ந்தவர்களை விடுவிக்கவேண்டும் இல்லையெனில் மறியலில் ஈடுபடப்போவதாக தெரிவித்தனர். இதனால் குளித்தலை போலீஸ்நிலையப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்வதாக கூறியதையடுத்து அவர்கள் அங்கிருந்து சென்றனர்.

இந்தநிலையில் மோதல் குறித்து கீழகுட்டப்பட்டியைச் சேர்ந்த தேவா அளித்த புகாரின் பேரில் கிருஷ்ணராயபுரம் வட்ட பகுதியைச் சேர்ந்த சந்திரசேகரன் (19) உள்பட 8 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். அதேபோல தாங்கள் வாகனத்தில் வந்தபோது தங்களை கீழகுட்டப்பட்டி பகுதியில் வழிமறித்து தாக்கியதாக பழனிகுமார் அளித்த புகாரின் பேரில் கீழகுட்டப்பட்டியைச் சேர்ந்த தேவா உள்பட 8 பேர் மீது குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இந்த மோதல் தொடர்பாக சந்திரசேகரன் உள்பட 5 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர். கைது செய்யப்பட்டவர்கள் சந்திரசேகரனை தவிர மற்ற 4 பேரும் சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com