கிண்டி ரெயில் நிலையம் அருகே பார்வையற்ற பிச்சைக்காரரிடம் பணம் பறிப்பு

கிண்டி ரெயில் நிலையம் அருகே பார்வையற்ற பிச்சைக்காரரின் முகத்தில் மிளகாய் பொடியை தூவி, அவரிடம் இருந்த பணத்தை மர்ம ஆசாமி பறித்து சென்றான்.
கிண்டி ரெயில் நிலையம் அருகே பார்வையற்ற பிச்சைக்காரரிடம் பணம் பறிப்பு
Published on

ஆலந்தூர்,

சென்னை கிண்டி ரெயில் நிலையத்தில் இருந்து கிண்டி தொழிற்பேட்டைக்கு செல்ல சுரங்கப்பாதை உள்ளது. இங்கு நேற்று காலை சுமார் 45 வயது மதிக்கத்தக்க பார்வையற்ற ஆண் ஒருவர் பிச்சை எடுத்துக் கொண்டு இருந்தார்.

அப்போது அங்கு வந்த மர்ம ஆசாமி ஒருவன் பிச்சைக்காரரிடம் நீ, தினமும் இங்கு பிச்சை எடுக்கிறாய். உன்னிடம் உள்ள பணத்தை கொடு என்று மிரட்டினான். இதனால் பயந்து போன பிச்சைக்காரர் நானே, பிச்சை எடுத்து குடும்பத்தை நடுத்துகிறேன். என்னிடம் பணத்தை கேட்கலாமா என பரிதாபமாக கூறினார்.

இதனால் ஆத்திரமடைந்த மர்ம ஆசாமி தன்னிடம் இருந்த மிளகாய் பொடியை எடுத்து பிச்சைக்காரரின் முகத்தில் தூவினான். இதில் கண் எரிச்சல் தாங்க முடியாமல் அவர் அலறி துடித்தார். ஆனாலும் அந்த மர்ம ஆசாமி சிறிதும் ஈவு இரக்கமின்றி பிச்சைக்காரரிடம் இருந்து பணத்தை பறித்துக் கொண்டு தப்பி சென்றுவிட்டான்.

இதையடுத்து, கண் எரிச்சலால் அலறியவரை கண்டதும் ரெயில் நிலையத்திற்கு சென்றவர்கள் தண்ணீர் பாக்கெட்டுகளை வாங்கி வந்து அவரின் கண்களை கழுவி விட்டனர். இதனால் சிறிது நேரத்திற்கு பின்னர் பிச்சைக்காரர் சகஜநிலைக்கு வந்தார். பார்வையற்ற பிச்சைக்காரரின் முகத்தில் மிளகாய் பொடியை தூவி, பணத்தை பறித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com