புதுச்சத்திரம் அருகே: ஆம்னி பஸ் கவிழ்ந்தது; 16 பேர் படுகாயம்

புதுச்சத்திரம் அருகே ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 16 பேர் படுகாயமடைந்தனர்.
புதுச்சத்திரம் அருகே: ஆம்னி பஸ் கவிழ்ந்தது; 16 பேர் படுகாயம்
Published on

பரங்கிப்பேட்டை,

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் இருந்து நேற்று முன்தினம் ஆம்னிபஸ் ஒன்று பயணிகளுடன் சென்னை நோக்கி புறப்பட்டது. அந்த பஸ்சை திருவாரூர் அடுத்த மாவூர் கிராமத்தை சேர்ந்த ரவிச்சந்திரன்(வயது 40) என்பவர் ஓட்டினார்.

மாலை 5.30 மணியளவில் அந்த பஸ் சிதம்பரம்-கடலூர் சாலையில் சென்று கொண்டிருந்தது. புதுச்சத்திரம் அடுத்த மேட்டுப்பாளையம் வளைவில் திரும்பியபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தறிகெட்டு ஓடி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதில் பஸ்சில் பயணம் செய்த திருவாரூர் சேந்தமங்களத்தை சேர்ந்த சுப்பிரமணியன்(42), அவரது மனைவி கலைச்செல்வி(39), திருத்துறைப்பூண்டியை சேர்ந்த செல்லப்பாண்டியன் மகன் ஹரிகரன்(27), திருவாரூரை சேர்ந்த ஜவகர்அலி மகன் காஜா அமானுல்லா(43), கோயம்புத்தூரை சேர்ந்த விக்னேஷ்(34), அவரது மனைவி ஐஸ்வர்யா(27) உள்பட 16 பேர் பலத்த காயமடைந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்த புதுச்சத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, அக்கம்பக்கத்தினர் உதவியுடன் விபத்தில் படுகாயமடைந்த 16 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். மேலும் இந்த விபத்து குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விபத்தால் சிதம்பரம்-கடலூர் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com