

ஓட்டப்பிடாரம்:
ஓட்டப்பிடாரம் அருகே, தனியார் மின்உற்பத்தி நிலையத்தில் இரும்பு பொருட்கள் திருடியதாக 4 பேரை கைது செய்தனர்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
திருட்டு
ஓட்டப்பிடாரம் அருகே உள்ள எப்போதும்வென்றான் குமாரெட்டியார்புரம் பகுதியில் ஒரு தனியார் மின் உற்பத்தி நிலையம் உள்ளது.
இந்த மின் உற்பத்தி நிலையத்தில் உள்ள தொழிலாளர் குடியிருப்பின் அருகில் பழைய இரும்பு பொருட்கள், இரும்பு பிளேட்டுகள் மற்றும் செயின் பட்டை ஆகியவை காணாமல் போனதாக தனியார் மின் உற்பத்தி நிலைய மேனேஜர் சுப்பா எப்போதும்வென்றான் போலீசில் புகார் கொடுத்தார்.
கைது
இது குறித்து எப்போதும்வென்றான் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்வேல்முருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில், எப்போதும்வென்றான் கிழக்குத் தெருவைச் சேர்ந்த முனியசாமி மகன் முத்துமுருகன் (வயது 32), கண்ணங்கோட்டை தெற்கு தெருவைச் சேர்ந்த வேல்சாமி மகன் சங்கர் (41), வடக்கு காலனியைச் சேர்ந்த முனியசாமி மகன் கார்த்திக் (32) மற்றும் நடுத்தெருவைச் சேர்ந்த முருகேசபாண்டியன் மகன் கார்த்திக் (33) ஆகிய 4 பேரும் தனியார் மின் உற்பத்தி நிலையத்தில் பழைய இரும்பு பொருட்களை திருடியது தெரியவந்தது.
இதனையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து இரும்பு பிளேட்டுகள் மற்றும் பழைய செயின் பட்டை ஆகியவற்றை மீட்டனர்.