திட்டக்குடி அருகே மணல் குவாரியை மூடக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்

திட்டக்குடி அருகே மணல் குவாரியை மூடக்கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திட்டக்குடி அருகே மணல் குவாரியை மூடக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்
Published on

திட்டக்குடி,

திட்டக்குடி பேரூராட்சி இளமங்கலம் பகுதியில் வெள்ளாற்றில் அரசு மணல் குவாரி இயங்கி வருகிறது. இந்த மணல் குவாரியில் எல்லையை தாண்டி பக்கத்து கிராமமான கீழ்செருவாய் பகுதி வெள்ளாற்றில் மணல் எடுக்கப்படுவதாக தெரிகிறது. இதற்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், மணல்குவாரியை மூட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று கீழ்செருவாய் பகுதி வெள்ளாற்றில் மணல் எடுக்க பொக்லைன் எந்திரம் திட்டக்குடி-தொழுதூர் சாலையில் வந்து கொண்டிருந்தது. இதை அறிந்த கீழ்செருவாய் மக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் ஒன்று திரண்டு பொக்லைன் எந்திரத்தை மறித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கிராமப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுவதாகவும், மணல் குவாரியை மூடக்கோரியும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இது பற்றி தகவல் அறிந்த திட்டக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட னர். இதில் தி.மு.க. பரமகுரு, பட்டூர் அமிர்தலிங்கம், தமிழக வாழ்வுரிமை கட்சி சுரேந்தர், கற்பகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி கவுதமன், வக்கீல் கார்த்திக், பா.ம.க. ராஜராஜன், கொளஞ்சி, பாரதீய ஜனதா கட்சி அய்யப்பன்ரவி, சுரேஷ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி முருகையன், விவசாய சங்கம் தியாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பேச்சுவார்த்தையில் மணல் குவாரி இயங்குவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்கவும் மேலும் தாசில்தார் தலைமையில் அனைத்து கட்சி கூட்டத்தை நடத்தி மணல் குவாரி இயக்குவது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என முடிவு செய்யப்பட்டது. இதை ஏற்று கிராம மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com