

திருச்செந்தூர்,
திருச்செந்தூரில் இருந்து தளவாய்புரம், காயாமொழி, நாதன்கிணறு, பூச்சிக்காடு, செங்குழி, நாலுமாவடி, நாசரேத் வழியாக நெல்லைக்கு தினமும் காலையில் அரசு பஸ் இயக்கப்படுகிறது. இந்த பஸ்சில் தளவாய்புரம், காயாமொழி, நாதன்கிணறு, பூச்சிக்காடு, செங்குழி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மாணவ-மாணவிகள், நாலுமாவடி பகுதியில் உள்ள பள்ளிக்கூடங்களுக்கு படிக்க செல்கின்றனர்.
பின்னர் மாலையில் நாசரேத்தில் இருந்து திருச்செந்தூருக்கு இயக்கப்படும் அரசு டவுன் பஸ்சில் மாணவ-மாணவிகள் தங்களது கிராமங்களுக்கு திரும்பி செல்வது வழக்கம்.
இந்த நிலையில் காலையில் இயக்கப்படும் அரசு பஸ்சானது, கடந்த சில நாட்களாக திருச்செந்தூரில் இருந்து புறப்பட்டு, செங்குழியில் இருந்து நாலுமாவடிக்கு செல்லாமல் தேரிக்காடு வழியாக வனத்திருப்பதி, நாசரேத் வழியாக நெல்லை செல்கிறது. இதனால் தேரிக்காடு விலக்கில் இருந்து மாணவ-மாணவிகள் நாலுமாவடி பகுதியில் உள்ள பள்ளிக்கூடங்களுக்கு சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்வதால் பெரிதும் அவதிப்படுகின்றனர்.
இதேபோன்று மாலையில் நாசரேத்தில் இருந்து திருச்செந்தூருக்கு இயக்கப்படும் அரசு டவுன் பஸ்சும் நேற்று இயக்கப்படவில்லை. இதனால் பள்ளி மாணவ-மாணவிகள் பெரிதும் அவதி அடைந்தனர். எனவே அரசு பஸ்களை உரிய வழித்தடத்தில் சரியான நேரத்தில் சீராக இயக்க வேண்டும் என்று மாணவ-மாணவிகள், பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.