திருவேங்கடம் அருகே: பள்ளி மாணவர்கள் நாற்று நடும் போராட்டம் - சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

திருவேங்கடம் அருகே, சாலையை சீரமைக்கக்கோரி பள்ளி மாணவர்கள் நேற்று சாலையில் நாற்று நடும் போராட்டம் நடத்தினர்.
திருவேங்கடம் அருகே: பள்ளி மாணவர்கள் நாற்று நடும் போராட்டம் - சாலையை சீரமைக்க வலியுறுத்தல்
Published on

திருவேங்கடம்,

நெல்லை மாவட்டம் திருவேங்கடத்தை அடுத்துள்ள கலிங்கப்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்டது மேல மரத்தோணி மற்றும் கீழ மரத்தோணி கிராமங்கள். இங்கு இருந்து சுமார் 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ- மாணவிகள் கலிங்கப்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர்.

இந்தநிலையில் பள்ளிக்கூடத்துக்கு செல்லும் சாலையில் கலிங்கப்பட்டியில் இருந்து சுப்புலாபுரம் வரையிலான சாலை சேதமடைந்து, குண்டும் குழியுமாக உள்ளது. மேலும் தற்போது மழைபெய்து வருவதால் அருகிலுள்ள பெரிய குளம் கண்மாயின் கரையிலுள்ள மணல் அரித்து வரப்பட்டு சாலை சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் சாலையில் செல்லும் மாணவ- மாணவிகள் மற்றும் வாகன ஓட்டிகள் வழுக்கி விழுந்து காயமடைந்து வருகின்றனர்.

மேலும் இந்த சாலையை சீரமைக்க கேட்டு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்தநிலையில் ஆத்திரம் அடைந்த பள்ளி மாணவ- மாணவிகள் மற்றும் பொதுமக்கள் நேற்று சாலையில் நாற்று நட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் மாணவ, மாணவிகள் பள்ளிக்கூடத்துக்கு புறப்பட்டு சென்றனர்.

மேலும் சாலையை சீரமைக்க அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com