திருவாரூர் அருகே, நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிடம் ரூ.9,200 லஞ்சம் வாங்கிய பட்டியல் எழுத்தர் மேஸ்திரி கைது

திருவாரூர் அருகே நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிடம் ரூ.9,200 லஞ்சம் வாங்கிய பட்டியல் எழுத்தர், மேஸ்திரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
திருவாரூர் அருகே, நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிடம் ரூ.9,200 லஞ்சம் வாங்கிய பட்டியல் எழுத்தர் மேஸ்திரி கைது
Published on

திருவாரூர்,

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் தாலுகா எடமேலையூர் கிராமத்தில் வசித்து வருபவர் மணிமொழியன்(வயது 62). விவசாயியான இவர் தனது வயலில் அறுவடை செய்த நெல் மூட்டைகளை எடமேலையூரில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்ய எடுத்து சென்றார்.

அங்கு நெல் கொள்முதல் நிலைய பட்டியல் எழுத்தராக பணிபுரியும் முருகையன்(52) மற்றும் மேஸ்திரி கோவிந்தராஜ் ஆகியோர் தனித்தனியே லஞ்சமாக மூட்டைக்கு ரூ.30 வீதம் கேட்டுள்ளனர்.

ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத மணிமொழியன் இதுகுறித்து திருவாரூர் லஞ்ச ஒழிப்பு போலீஸ் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். இதனையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு நந்தகோபால் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் தமிழ்செல்வி, சித்ரா மற்றும் போலீசார் மணிமொழியனிடம் ரசாயன பவுடர் தடவிய பணத்தை கொடுத்து அதை முருகையன் மற்றும் கோவிந்தராஜிடம் கொடுக்குமாறு கூறி அனுப்பினர்.

அதன்படி மணிமொழியன் எடமேலையூர் நெல் கொள்முதல் நிலையத்திற்கு சென்று பட்டியல் எழுத்தர் முருகையனிடம் ரூ.6 ஆயிரமும், மேஸ்திரி கோவிந்தராஜிடம் ரூ.3,200-ம் லஞ்சமாக கொடுத்தார்.

அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், பட்டியல் எழுத்தர் முருகையன், மேஸ்திரி கோவிந்தராஜ் ஆகிய இருவரையும் கையும், களவுமாக பிடித்தனர். மேலும் அவர்களிடம் ரசாயனம் தடவிய ரூ.9 ஆயிரத்து 200 மற்றும் கணக்கில் வராத ரூ.10 ஆயிரத்து 530 என மொத்தம் ரூ.19 ஆயிரத்து 730-ஐ கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து திருவாரூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து பட்டியல் எழுத்தர் முருகையன், மேஸ்திரி கோவிந்தராஜ் ஆகிய இருவரையும் கைது செய்து திருவாரூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருத்துறைப்பூண்டி கிளை சிறையில் அடைத்தனர். இவர்களில் மேஸ்திரி கோவிந்தராஜ் தற்காலிக பணியாளர் ஆவார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com