

திருவேங்கடம்,
தென்காசி மாவட்டம் திருவேங்கடம் தாலுகா மைப்பாறையில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் காட்டு பகுதியில் சுமார் 12 ஏக்கர் பரப்பளவில் பட்டாசு ஆலை ஒன்று அமைந்துள்ளது. அந்த ஆலையில் மொத்தம் 33 அறைகள் உள்ளன.
விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம் பண்ணை புள்ளகவுண்டன்பட்டியை சேர்ந்த பொன்னுச்சாமி மகன் பால்ராஜ் என்பவருக்கு சொந்தமான இந்த பட்டாசு ஆலையை, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள புதுஅப்பனேரியை சேர்ந்த கிருஷ்ணசாமி மகன் ராமானுஜம் குத்தகைக்கு நடத்தி வருவதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக ஆலையில் வேலை பார்த்து ஊழியர்கள் நேற்று முன்தினம் மாலை வீடுகளுக்கு சென்று விட்டனர்.
இந்தநிலையில் நேற்று காலை 8 மணி அளவில் அந்த ஆலையில் இருந்து திடீரென பயங்கர சத்தத்துடன் பட்டாசுகள் வெடித்து சிதறின. இந்த சத்தத்தை கேட்டு, ஆலையை சுற்றியுள்ள நிலத்தில் விவசாயம் செய்து கொண்டிருந்த விவசாயிகள், திருவேங்கடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில் திருவேங்கடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் சத்தியவேந்தன், காசிப்பாண்டியன் உள்ளிட்ட போலீசார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் பாலசுப்பிரமணியன் (மைப்பாறை), செல்லமுருகன் (வரகனூர்) உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு வந்தனர். மேலும் இதுபற்றிய தகவலின் பேரில் சங்கரன்கோவில் தீயணைப்பு நிலைய அலுவலர் சகாயராஜ் தலைமையில் தீயணைப்பு வீரர்களும் வந்தனர். அவர்கள் அங்கு பற்றி எரிந்த தீயை அணைத்து மேலும் பரவாமல் தடுத்தனர்.
ஆனாலும் இந்த வெடி விபத்தில் பட்டாசுகள் வைக்கப்பட்டிருந்த 4-வது அறை கட்டிடம் முழுவதும் இடிந்து தரைமட்டமானது. நேற்று ஊழியர்கள் யாரும் இல்லாததால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.
சங்கரன்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலசுந்தரம் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.