

தூத்துக்குடி:
தூத்துக்குடி அருகே ஆசிரியரிடம் ஆன்லைன் மூலம் மோசடி செய்யப்பட்ட ரூ.50 ஆயிரத்தை சைபர் குற்றப்பிரிவு போலீசார் உடனடியாக மீட்டனர்.
ஆசிரியர்
தூத்துக்குடி அருகே பண்டாரவிளையைச் சேர்ந்தவர் பாலசிங். இவருடைய மகன் ஆபிரகாம் ஆனந்தகுமார் (வயது 43). இவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 25.04.2021 அன்று காலையில் தனது செல்போனில் இருந்து போன்பே மூலம் ரூ.1,999-க்கு ரீசார்ஜ் செய்து உள்ளார்.
அப்போது அவரது வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டது. ஆனால் ரீசார்ஜ் செய்யப்படவில்லை. இதனால் ஆபிரகாம் ஆனந்தகுமார், போன்பே வாடிக்கையாளர் சேவை மையத்தை இணையதளத்தில் தேடி உள்ளார். அப்போது அவர், இணையதளத்தில் இருந்த போலியான போன்பே எண்ணை தொடர்பு கொண்டு பேசி உள்ளார்
உடனே அவர்கள், ஆபிரகாம் ஆனந்தகுமாரின் வங்கி கணக்கு விவரத்தை சேகரித்து, ஓ.டி.பி. எண்ணையும் பெற்று உள்ளனர். அதன்பிறகு அவரது வங்கி கணக்கில் இருந்த ரூ.49 ஆயிரத்து 578-யை எடுத்துள்ளனர்.
மீட்பு
இதனால் அதிர்ச்சி அடைந்த ஆபிரகாம் ஆனந்தகுமார் உடனடியாக 2 மணி நேரத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாரிடம் புகார் கொடுத்தார். அதன்பேரில், சைபர் குற்றப்பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன் விசாரணை நடத்தினார்.
தொடர்ந்து போலியான நிறுவனத்தின் விவரங்களை சேகரித்த போலீசார், அந்த போலி நிறுவனத்தின் வங்கி கணக்கை முடக்கம் செய்து, அதில் இருந்த ரூ.49 ஆயிரத்து 578-ஐ மீண்டும் எடுத்து ஆபிரகாம் ஆனந்தகுமாரின் வங்கி கணக்குக்கு மாற்றினர். இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் கூறியதாவது:-
உடனடி புகார்
பொதுமக்களிடம் வங்கி அதிகாரிகள் பேசுவதாகவோ, கடன் தருவதாகவோ, உங்களுக்கு சொந்தமான இடத்தில் செல்போன் டவர் அமைத்து தருவதாகவோ, பரிசுப்பொருள் அனுப்புவதாகவோ, பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை குறைந்த விலையில் தருவதாகவோ, வேலைவாய்ப்பு தருவதாக கூறி வங்கி கணக்கு விவரங்கள் மற்றும் செல்போனுக்கு வரும் ஒருமுறை கடவுச்சொல் எண்ணை கேட்டால், எக்காரணம் கொண்டும் யாரிடமும் அவற்றை கொடுக்கக்கூடாது.
காலதாமதம் செய்யாமல் 2 மணி நேரத்தில் ஆபிரகாம் ஆனந்தகுமார் புகார் அளித்ததால், அவரது பணத்தை போலீசார் மீட்டு கொடுத்தனர். இதுபோன்று சைபர் குற்றங்கள் மூலம் பொதுமக்களின் வங்கி கணக்கில் மோசடி செய்யப்பட்டால் உடனடியாக தூத்துக்குடி மாவட்ட போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் இயங்கி வரும் ஹலோ போலீஸ் என்ற 95141 44100 என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.