

விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் திண்டிவனம் அருகே காட்டுச்சிவிரி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள், 350 பக்க ஆவணங்களுடன், மாவட்ட கலெக்டர் அண்ணாதுரையிடம் ஒரு புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
மயிலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட காட்டுச்சிவிரி ஊராட்சியில் பொதுநிதி, மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டநிதி மற்றும் பல்வேறு வளர்ச்சி திட்ட நிதியில் பல லட்சம் ரூபாய் வரை முறைகேடு நடந்துள்ளது. இதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் செய்த முறைகேடுக்கான ஆதாரங்களை 350 பக்க ஆவணங்களுடன் இந்த மனுவில் அளித்துள்ளோம்.
குறிப்பாக காட்டுச்சிவிரி ஊராட்சியில் மின்விளக்கு, குடிநீர் குழாய் பராமரிப்பு செலவிற்காக இல்லாத கடைகளின் பெயரில் பல லட்சம் ரூபாய்க்கு கணக்கு காண்பித்து முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் 10 ஆண்டுகளாக செயல்படாத நூலகத்திற்கு செலவு செய்ததாகவும், அங்கன்வாடி கட்டிடத்திற்கு கழிவறை கட்டாமலேயே புதியதாக கழிவறை கட்டியதாகவும் முறைகேடு செய்துள்ளனர். எனவே மாவட்ட கலெக்டர், இந்த முறைகேடு குறித்து உரிய விசாரணை நடத்தி முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர். மனுவை பெற்ற கலெக்டர், இதுகுறித்து விசாரணை நடத்துவதாக கூறினார்.