திருச்சுழி அருகே விவசாயி உருட்டுக்கட்டையால் அடித்து கொலை: தாத்தா- பேரன் கைது

திருச்சுழி அருகே விவசாயியை கொலை செய்த தாத்தா- பேரனை போலீசார் கைது செய்தனர்.
திருச்சுழி அருகே விவசாயி உருட்டுக்கட்டையால் அடித்து கொலை: தாத்தா- பேரன் கைது
Published on

திருச்சுழி,

திருச்சுழி அருகே உள்ள முத்துராமலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் கண்ணன். விவசாயியான இவர் தனது தாயாருடன் வசித்து வருகிறார். இவருக்கும், இவரது விவசாய நிலத்தின் அருகில் உள்ள நிலத்தின் உரிமையாளர் கல்லூரணியைச் சேர்ந்த விவசாயி அழகர்சாமிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று முன் தினம் அழகர்சாமி தனது வயலின் வரப்பு ஓரத்தில் இருந்த புற்செடிகளை பிடுங்கி அவற்றுக்கு தீ வைத்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக தீ மளமளவென கண்ணனின் விவசாய நிலத்துக்கும் பரவியுள்ளது.

இது தொடர்பாக கண்ணன், அழகர்சாமிக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இது குறித்து அழகர்சாமி வீட்டுக்குச் சென்று தனது பேரன் தமிழரசனிடம் கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த தமிழரசன் நேற்று மாலை வயலுக்குச் சென்று கண்ணனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் வாக்குவாதம் முற்றிய நிலையில், தமிழரசன் அருகில் கிடந்த உருட்டுக்கட்டையால் கண்ணனை தாக்கியதாக தெரிகிறது.

இதில் படுகாயம் அடைந்த கண்ணன் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்துள்ளார். கண்ணனின் தாய் தனது மகன் வீடு திரும்பாததால் வயலுக்குச் சென்று பார்த்துள்ளார்.

அங்கு ரத்த வெள்ளத்தில் கண்ணன் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார். இதில் கண்ணன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்த புகாரின் பேரில் வி.ரெட்டியபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து இது தொடர்பாக அழகர்சாமி, அவரது பேரன் தமிழரசன் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com