திருக்கனூர் அருகே ஆலய நுழைவு போராட்டத்துக்கு எதிர்ப்பு: கிராம மக்கள் மீது போலீசார் தடியடி

திருக்கனூர் அருகே கூனிச்சம்பட்டு கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் தாழ்த்தப்பட்டவர்கள் வந்து சாமி கும்பிட எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.
திருக்கனூர் அருகே ஆலய நுழைவு போராட்டத்துக்கு எதிர்ப்பு: கிராம மக்கள் மீது போலீசார் தடியடி
Published on

திருக்கனூர்,

புதுச்சேரி மாநிலம் திருக்கனூரை அடுத்துள்ள கூனிச்சம்பட்டு கிராமத்தில் பிரசித்தி பெற்ற திரவுபதி அம்மன் கோவில் உள்ளது.

இந்த கோவிலில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நடந்த திருவிழாவில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த ஒரு பெண் சாமி கும்பிட சென்றபோது அவரை தடுத்து நிறுத்தியதாக பிரச்சினை எழுந்தது. அது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியதால், இரு தரப்பினரிடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது.

இந்த சம்பவத்தை கண்டித்து அந்த சமயத்தில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. அதைத் தொடர்ந்து போலீசார் சாமி கும்பிட அனுமதி மறுக்கப்பட்ட பெண்ணையும், மற்றொரு தரப்பையும் அழைத்து அதே கோவிலில் சாமி கும்பிட வைத்ததால் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

இந்த சூழ்நிலையில் ஆடி வெள்ளிக்கிழமையான நேற்று கூனிச்சம்பட்டு கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் காலை 9 மணிக்கு ஆலய வழிபாடு போராட்டம் நடத்தப்படும் என்று புதுச்சேரி மாநில அம்பேத்கர் தீண்டாமை ஒழிப்பு மற்றும் உரிமை இயக்கத்தினர் அறிவித்தனர். அதற்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தற்போது எந்த பிரச்சினையும் இல்லாமல் அனைவரும் கோவிலுக்கு சென்று வழிபட்டுக்கொண்டிருக்கும்போது ஆலய வழிபாடு போராட்டம் நடத்தப்போவதாக நோட்டீசு அடித்தது ஏன் என்று கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் ஆலய வழிபாடு போராட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆண்களும், பெண்களும் என 500-க்கும் மேற்பட்டவர்கள் திரண்டதால் பரபரப்பு நிலவியது. அப்போது மற்றொரு தரப்பினர் ஆலய வழிபாடு நடத்த போலீசார் ஏற்பாடு செய்தனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள் யாரும் கோவிலுக்குள் செல்லமுடியாதபடி கோவில் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதைத் தொடர்ந்து அவர் களிடம் வில்லியனூர் சப்-கலெக்டர் உதயகுமார், தாசில்தார் பிரான்சிஸ் மேத்யூ, சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வ குப்தா, போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

ஆனால் அதிகாரிகளின் பேச்சுவார்த்தையை கிராம மக்கள் ஏற்க மறுத்தனர். அதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

அதைத் தொடர்ந்து கிராம மக்களை அப்புறப்படுத்த போலீசார் தடியடி நடத்தினார்கள். அதனால் கோவில் முன்பு அமர்ந்திருந்த கிராம மக்கள் சிதறி ஓடினார்கள். இதில் சிலர் லேசான காயம் அடைந்தனர். மேலும் ஆலய வழிபாடு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தவர்கள் அறிவித்தபடி கோவிலுக்கு வராததால் கிராம மக்கள் அங்கிருந்து சென்றனர்.

தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவியதால் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வ குப்தா தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

இதற்கிடையே பதற்றமான சூழ்நிலை நிலவுவதை அறிந்து போலீஸ் ஐ.ஜி. சுரேந்தர் சிங் யாதவ், கூனிச்சம்பட்டு கிராமத்துக்கு வந்து கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். கோவிலுக்குள் ஒரு பிரிவினரை சாமி கும்பிட அனுமதிக்கமாட்டோம் என்று கூறுவது சட்டவிரோதமானது என்று அறிவுறுத்தினார். ராமேசுவரம் போன்ற புகழ்பெற்ற வழிபாட்டு தலங்களில்கூட அனைவரும் சென்று சாமி தரிசனம் செய்கின்றனர். எனவே ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். மீறி கோவிலுக்குள் செல்பவர்களை யாராவது தடுத்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com