திருக்கோவிலூர் அருகே, இருதரப்பினர் மோதல்; 14 பேர் கைது

திருக்கோவிலூர் அருகே இருதரப்பினர் மோதல் சம்பவம் தொடர்பாக 14 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருக்கோவிலூர் அருகே, இருதரப்பினர் மோதல்; 14 பேர் கைது
Published on

திருக்கோவிலூர்,

திருக்கோவிலூரை அடுத்துள்ள வி.புத்தூரில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு பயிலும் மாணவிகளை அருகில் உள்ள கீழக்கொண்டூரை சேர்ந்த இளைஞர்கள் சிலர், கேலி-கிண்டல் செய்ததாக தெரிகிறது. இதுதொடர்பாக வி.புத்தூர் கிராம மக்களுக்கும், கீழக்கொண்டூர் கிராம மக்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று, கீழக்கொண்டூர் கிராமத்தை சேர்ந்த கவியரசு (வயது 24) என்பவர், பள்ளி முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வி.புத்தூரை சேர்ந்த இளைஞர்கள் சிலர், கவியரசுவை திட்டி, தாக்கி, மோட்டார் சைக்கிளை சேதப்படுத்தியதாக தெரிகிறது.

இதுபற்றி அறிந்த கவியரசுவின் ஆதரவாளர்கள் கத்தி, தடி, கொடுவாள், இரும்பு பைப் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் வி.புத்தூருக்கு வந்து, அங்கிருந்த ராஜாராம் என்பவரை தாக்கியுள்ளனர். மேலும் அவ்வழியாக சென்ற அரசு பஸ்சையும் தாக்கிசேதப்படுத்தியதாக தெரிகிறது.

இதுபற்றி அறிந்த வி.புத்தூர் பகுதியை சேர்ந்த சிலர் அங்கு வந்து கீழக்கொண்டூரை சேர்ந்தவர்களை தாக்கியதாக தெரிகிறது. இதனால் இருதரப்பினரிடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது. இதுபற்றி அறிந்த திருக்கோவிலூர் துணைபோலீஸ் சூப்பிரண்டு மகேஷ் தலைமையிலான அரகண்டநல்லூர் போலீசார் வி.புத்தூர் கிராமத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

மேலும் இருதரப்பை சேர்ந்த 18 பேர் மீது வழக்குப்பதிவு செய்து இருதரப்பையும் சேர்ந்த அன்பரசன், விஜய், கந்தசாமி மற்றும் ஆரோன், கவியரசு, மணிகண்டன், சசி, ஜெயச்சந்திரன், ஜெ.தினேஷ், இலக்கியதென்றல், ஞானப்பிரகாஷ், மு.தினேஷ், ரஞ்சித்குமார், ராஜதுரை ஆகிய 14 பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள சிலம்பரசன், ரஞ்சித், நாகராஜ், விஸ்வநாதன் ஆகிய 4 பேரை தேடி வருகின்றனர். இருப்பினும் அங்கு பதற்றமாக நிலை நீடிப்பதால் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com