

இட்டமொழி,
நெல்லை அருகே இளம்பெண் கழுத்தை அறுத்துக் கொலை செய்யப்பட்டார். அவர் கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பேட்டையைச் சேர்ந்தவர்
நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள பெருமாள் நகர் விலக்கில் இருந்து சேரகுளம் செல்லும் சாலையில் கெமிக்கல் கம்பெனி ஒன்று மூடி கிடக்கிறது. அந்த கம்பெனி கட்டிட வளாகத்துக்குள் இளம்பெண் ஒருவர் பிணமாக கிடப்பதாக நேற்று மாலையில் மூலைக்கரைப்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து நாங்குநேரி துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன், இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு இளம்பெண் ஒருவர் கழுத்து அறுபட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அந்த பெண் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. தடய அறிவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு, தடயங்களை சேகரித்தனர்.
போலீசாரின் விசாரணையில், இறந்து கிடந்த பெண் நெல்லை பேட்டை பகுதியை சேர்ந்த மதார்மைதீன் மகள் பர்வீன் (வயது 18) என தெரியவந்தது.
பெற்றோர் அடையாளம் காட்டினர்
அந்த இளம்பெண் பிளஸ்-2 முடித்து விட்டு, கம்ப்யூட்டர் பயிற்சிக்கு சென்று வந்துள்ளார். நேற்று காலையில் கம்ப்யூட்டர் பயிற்சிக்கு சென்று விட்டு மதியம் வழக்கம் போல் வீட்டுக்கு வந்து விடுவதாக பெற்றோரிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். மதியம் 1 மணியளவில் செல்போனில் தாயாரிடம் பர்வீன் பேசியுள்ளார். அதன்பிறகு மாலை வரை அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பர்வீன் செல்போனுக்கு தொடர்பு கொண்டனர். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை.
தற்போது போலீசார் தகவல் தெரிவித்ததை தொடர்ந்து பெற்றோர் சம்பவ இடத்துக்கு சென்றனர். கொலை செய்யப்பட்டு கிடந்தது பர்வீன் தான் என்பதை அடையாளம் காட்டினர். அவரது உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. இதையடுத்து போலீசார், அவரது உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் விசாரணை
இதுகுறித்து மூலைக்கரைப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கம்ப்யூட்டர் பயிற்சிக்கு சென்ற இளம்பெண்ணை யாரேனும் கடத்தி சென்று கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இருந்தாலும் வேறு ஏதேனும் காரணம் இருக்குமா? என்றும், கொலையாளிகள் யார்? என்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை அருகே இளம்பெண் கழுத்தை அறுத்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.