திருவள்ளூர் அருகே சிறுமி கொலை வழக்கில் உறவினர் கைது

திருவள்ளூர் அருகே சிறுமி கொலை வழக்கில் உறவினர் கைது செய்யப்பட்டார்.
திருவள்ளூர் அருகே சிறுமி கொலை வழக்கில் உறவினர் கைது
Published on

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த கொத்தியம்பாக்கம் பகுதியில் சத்தியநாராயணன் என்பவருக்கு சொந்தமான சிமெண்டு செங்கல் தொழிற்சாலை உள்ளது. இங்கு 50-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த தம்பதி தங்களது 4 வயது பெண் குழந்தையுடன் தங்கி வேலை செய்து வந்தனர். கடந்த 14-ந்-தி அந்த தொழிற்சாலையில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி மாயமானார். பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

இந்தநிலையில் கடந்த 15-ந்தேதி தொழிற்சாலை அருகே உள்ள முட்புதரில் முகத்தில் காயங்களுடன் சிறுமி பிணமாக கிடந்தார். இது குறித்து சிறுமியின் தந்தை வெள்ளவேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில் அந்த தொழிற்சாலையில் வேலைபார்க்கும் சிறுமியின் உறவினரான ஒடிசாவை சேர்ந்த நிலக்கர்(22) சிறுமியை கொலை செய்தது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து விசாரித்தனர்.

போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் அவர் கூறியிருப்பதாவது:-
ஒடிசாவை சேர்ந்த நான் எனது உறவினர்களுடன் இந்த தொழிற்சாலையில் தங்கி கடந்த 5 ஆண்டுகளாக வேலை செய்து வருகிறேன். அடிக்கடி அந்த சிறுமியை வெளியே அழைத்து சென்று தின்பண்டங்கள் வாங்கி கொடுப்பேன். அதே போல கடந்த 14-ந்தேதி சக தொழிலாளர்களுடன் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது நாங்கள் மது குடித்தோம். அப்போது அந்த சிறுமி என்னிடம் வந்து, தனக்கு சிக்கன் பக்கோடோ வாங்கி தருமாறு கேட்டார். நான் பின்னர் வாங்கி தருவதாக கூறினேன். இருப்பினும் அந்த சிறுமி என்னை தொடர்ந்து நச்சரித்ததால் மது போதையில் இருந்த நான் ஆத்திரத்தில் கன்னத்தில் தாக்கினேன். இதில் சிறுமி மயங்கி கீழே விழுந்தார். மதுபோதையில் இருந்ததால் அவரை அங்கேயே விட்டு விட்டு மீண்டும் நான் தங்கும் இடத்திற்கு வந்து விட்டேன். மறுநாள் காலையில்தான் எனக்கு அந்த சிறுமி இறந்து போனது தெரியவந்தது. இருப்பினும் போலீசாரிடம் மாட்டிக் கொள்ளாமல் இருப்பதற்காக நான் ஒன்றும் தெரியாதது போல் அவர்களுடன் ஓன்றாக இருந்து வந்தேன். இருப்பினும் போலீசார் என்னை கையும் களவுமாக கைது செய்து விட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com