திருச்சி அருகே மாரியம்மன் கோவிலில் சிலை கடத்தல் தடுப்பு போலீசார் திடீர் ஆய்வு

திருச்சி அருகே மாரியம்மன் கோவிலில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.
திருச்சி அருகே மாரியம்மன் கோவிலில் சிலை கடத்தல் தடுப்பு போலீசார் திடீர் ஆய்வு
Published on

சோமரசம்பேட்டை,

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டையை அடுத்துள்ள அல்லித்துறையில் பார்வதீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சிவபெருமாள், அம்பாளுடன் வீற்றிருக்கும் பிரதோஷ நாயகர் சிலை இருந்தது. பிரதோஷ நாட்களில் இந்த சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு அந்த சிலை திருட்டு போனது.

இந்நிலையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மீட்ட சிலைகளில் ஒன்று, அல்லித்துறை பார்வதீஸ்வரர் கோவிலில் இருந்து திருடிச் செல்லப்பட்ட சிலை என்பது தெரியவந்தது. இது பற்றி போலீசார், அந்த கோவிலுக்கு வந்து விசாரித்தபோது, அது பிரதோஷ நாயகர் சிலை என்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த சிலை கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டது.

கடந்த 2005-ம் ஆண்டு கோர்ட்டு, அந்த சிலையை சம்பந்தப்பட்ட கோவிலில் ஒப்படைக்க உத்தரவிட்டது. ஆனால் அந்த சிலையை அல்லித்துறை கோவிலில் வைக்க போதிய பாதுகாப்பு இல்லாத காரணத்தால், அந்த சிலை சோமரசம்பேட்டை மாரியம்மன் கோவிலில் ஒப்படைக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜோஸ் தங்கையா, இன்ஸ்பெக்டர் இந்திரா, சப்-இன்ஸ்பெக்டர் முருகபெருமாள் உள்ளிட்டோர், சோமரசம்பேட்டை மாரியம்மன் கோவிலுக்கு திடீரென வந்தனர். அவர்கள் பிரதோஷ நாயகர் சிலையை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து சென்றனர். இதனால் அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது. சிலை ஆய்வு செய்யப்பட்டபோது கோவில் நிர்வாக அதிகாரி வெண்ணிலா, குணசேகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com