உடுமலை அருகே அமராவதி ஆற்றில் உலாவரும் முதலை

உடுமலையை அடுத்த கல்லாபுரம் அருகே அமராவதி ஆற்றில் முதலை உலா வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். அதை பிடிக்க வேண்டும் என வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
உடுமலை அருகே அமராவதி ஆற்றில் உலாவரும் முதலை
Published on

தளி,

வனப்பகுதியே உயிரினங்களின் ஜீவாதாரம் ஆகும். அங்கு மழை காலங்களில் உற்பத்தியாகின்ற ஆறுகள் மற்றும் ஓடைகள் மூலமாக சமதளபரப்புகள் தண்ணீரை பெற்று வருகின்றன. அதில் அமராவதி ஆற்றின் பங்கு முக்கியமானதாகும். மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உற்பத்தியாகின்றன இந்த ஆறு குதிரையாறு, நங்காஞ்சியாறு, பாலாறு, புறந்தலாறு, நல்லதங்காள் ஓடை போன்ற துணை நதிகளுடன் இணைந்து இறுதியில் கரூர் மாவட்டம் திருமுக்கூடலூரில் காவிரி ஆற்றுடன் கலக்கிறது.

200 கிலோமீட்டர் உடைய இந்த நெடுந்தூரப் பயணத்தில் ஏராளமான கிராமங்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதுடன் எண்ணற்ற உயிரினங்களுக்கு தேவையான இருப்பிடத்தையும் குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்கிறது. அமராவதி ஆற்றை தடுத்து மேற்குதொடர்ச்சிமலை அடிவாரத்தில் அமராவதி அணை கட்டப்பட்டது. அன்று முதல் பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு இன்று வரையிலும் அமராவதி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அப்போது அணையில் வசித்து வருகின்ற முதலைகள் மதகுகள் வழியாக ஆற்றுக்குள் வந்து விடுவதாக கூறப்படுகிறது.

ஆற்றில் நீர்வரத்து உள்ளவரை அவை வெளியில் வருவதில்லை. அதில் உள்ள மீன்கள் மற்றும் நீர்க்காகங்களை பிடித்து உணவாகக் கொண்டு வாழ்ந்து வருவதாக தெரிகிறது. ஆனால் கோடை காலத்தில் ஆற்றில் நீர்வரத்து குறைந்து விடுவதால் அவை உணவை தேடிக்கொண்டு கரையோரப் பகுதிகளில் புகுந்து விடுவதும் வாடிக்கையாக உள்ளது. அவ்வாறு செல்கின்ற முதலைகள் விவசாய கிணற்றில் தவறி விழுந்து வனத்துறையினர் மீட்டு வருகின்ற சம்பவமும் நடந்துள்ளது.

அமராவதி ஆற்றில் தஞ்சமடைந்துள்ள முதலைகள் இன்று வரையிலும் உயிர் சேதத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். காரணம் என்னவென்றால் கரையோர கிராமங்களில் வசித்து வருகின்ற பொதுமக்கள் அமராவதி ஆற்றில் குளிப்பது, துணி துவைப்பது, கால்நடைகளுக்கான தண்ணீர் தேவையை பூர்த்தி செய்வதென தொடர்ந்து அமராவதி ஆற்றுத் தண்ணீரை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த சூழலில் ஆற்றில் உள்ள முதலைகளுக்கு உணவு பற்றாக்குறை ஏற்படும்போது அதனை நிறைவு செய்வதற்காக மற்ற உயிரினங்களை தாக்கக் கூடிய வாய்ப்புகளும் உள்ளது.மேலும் பெண்முதலை ஒரு முறைக்கு சுமார் 20 முதல் 50 முட்டைகள் இடும் என்பதால் ஆற்றில் நாளடைவில் அதன் இனப் பெருக்கமும் அதிகரிக்கக் கூடிய சூழல் உள்ளது. அதற்கு ஆற்றின் கரையோரம் உள்ள மணற்பாங்கான பகுதிகள் உதவிகரமாக உள்ளது.

முதலைகளின் பெருக்கம் அதிகரித்து அவற்றிக்கு இட நெருக்கடி மற்றும் உணவு பற்றாக்குறை ஏற்படும் போது ஊருக்குள் நுழைவதற்கு முயற்சிக்கும் அல்லது ஆற்றில் இறங்கும் உயிரினங்களை தாக்கக் கூடிய நிலை ஏற்படும். எனவே கல்லாபுரம் அருகே அமராவதி ஆற்றில் உலா வருகின்ற முதலையை பிடித்து பண்ணையில் சேர்த்து பராமரிப்பதற்கு வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அமராவதி அணை மற்றும் ஆற்றுப் பகுதிக்கு முதலைகள் எப்படி வந்தது அவை எங்கிருந்து வந்தது என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com