உடுமலை அருகே வன எல்லையில் தீ வைக்கும் ஆசாமிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

உடுமலை அருகே வன எல்லையில் காட்டுப்பகுதியில் தீ வைக்கும் போதை ஆசாமிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உடுமலை அருகே வன எல்லையில் தீ வைக்கும் ஆசாமிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
Published on

தளி,

உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, புலி, சிறுத்தைகள் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. அதுமட்டுமின்றி கண்ணுக்கு புலப்படாத அரிய வகை வன உயிரினங்கள் மற்றும் தாவர வகைகளும் உள்ளது. மேலும் மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளை வாழ்விடமாக கொண்டு மலைவாழ் மக்களும் குடியிருந்து வருகிறார்கள். இங்கு கடந்த ஆண்டில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால் ஆறுகள் மற்றும் ஓடைகளில் நீர்வரத்து ஏற்பட்டது. அத்துடன் வனப்பகுதியும் பசுமைக்கு திரும்பியது.

ஆனால் வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை. இதனால் வனப்பகுதியில் உள்ள நீராதாரங்கள் படிப்படியாக நீர் இருப்பை இழந்து வந்தது. இதன் காரணமாக கோடை காலத்திற்கு முன்பாகவே வனப்பகுதியில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது.

இந்த சூழலில் வனஎல்லையை ஒட்டியுள்ள காட்டுப்பகுதியில் குடிபோதையில் வரும் மர்ம ஆசாமிகள் தீ வைத்து விடுவதால் அது வனப்பகுதியை அழித்து விடும் அபாயம் நிலவி வருகிறது.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

கடந்த சில மாதங்களாக ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் வனப்பகுதியில் உள்ள புற்கள், செடிகள், மரங்கள் உள்ளிட்டவை காய்ந்து வருகின்றது. இதன் காரணமாக அங்கு எளிதில் காட்டுத்தீ ஏற்படும் அபாயம் நிலவி வருகிறது. இந்த சூழலில் ஒரு சில போதை ஆசாமிகள் வைக்கும் தீயால் காட்டுத்தீயை உருவாக்கி விட்டு சென்று விடுகின்றனர்.

ஒன்பதாறு சோதனைச்சாவடி அருகில் உள்ள டாஸ்மாக் கடையில் மதுவை வாங்கிக்கொண்டு மர்ம ஆசாமிகள் மலை அடிவாரப்பகுதிக்கு செல்கின்றனர். பின்னர் அங்கு அமர்ந்து மது குடித்துவிட்டு போதை ஏறியவுடன் பீடி, சிகரெட், பிடிப்பது காகிதங்கள் மற்றும் குப்பைகளுக்கு தீ வைப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுகின்றனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக அங்கு காட்டுத்தீப்பற்றி விடுகிறது. அந்த வகையில் ஒன்பதாறு சோதனைச்சாவடிக்கு அருகில் உள்ள வயல்வெளியில் போதை ஆசாமிகள் தீ வைத்து விட்டு சென்று விட்டதாக கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து அங்கு திரண்ட விவசாயிகள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.

மேலும் கோடைகாலம் முடியும் வரையிலும் வனத்துறையினர் சோதனைச்சாவடிகளில் வாகனச்சோதனையை தீவிரப்படுத்த வேண்டும். பெட்ரோல், மண்எண்ணெய் உள்ளிட்ட எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை வனப்பகுதிக்குள் எடுத்துச்செல்லும் வாகன ஓட்டிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுமட்டுமின்றி வாகன ஓட்டிகள் வனப்பகுதிக்குள் வாகனங்களை நிறுத்தி பீடி, சிகரெட் உள்ளிட்டவற்றை பயன்படுத்தக்கூடாதென அறிவுரையும் வழங்க வேண்டும்.

மேலும் தீத்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மலை அடிவாரப்பகுதிகளில் ரோந்துப்பணியில் ஈடுபடுவதற்கும் வனத்துறையினர் முன்வர வேண்டும். மேலும் வனப்பகுதியின் நன்மையை கருதி ஒன்பதாறு சோதனைச்சாவடி அருகே அமைக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடையை அகற்றுவதற்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும். இதனால் வனப்பகுதியில் காட்டுத்தீ பரவுவது தடுக்கப்படுவதுடன் அறிய வகை தாவரங்கள் மற்றும் உயிரினங்கள் காப்பாற்றப்படும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com