உளுந்தூர்பேட்டை அருகே, வீடுகளில் தீ விபத்து; ரூ.5 லட்சம் நகை-பணம் சேதம்

உளுந்தூர்பேட்டை அருகே 2 வீடுகள் தீப்பிடித்து எரிந்ததில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள நகை, பணம் மற்றும் பொருட்கள் எரிந்து நாசமானது. இது பற்றிய விவரம் வருமாறு:-
உளுந்தூர்பேட்டை அருகே, வீடுகளில் தீ விபத்து; ரூ.5 லட்சம் நகை-பணம் சேதம்
Published on

உளுந்தூர்பேட்டை,

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே புகைப்பட்டி கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது மகன்கள் ஏழுமலை, செல்வமணி. இவர்கள் இருவருடைய வீடுகளும் அடுத்தடுத்து உள்ளது. நேற்று காலையில் இவர்கள் இருவரும் கூலி வேலைக்கு சென்று விட்டனர். இதனால் இருவரது வீடுகளும் பூட்டிக்கிடந்தது.

இந்த நிலையில் நேற்று மதியம் இருவரது வீடுகளும் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. இதில் வீடுகளுக்குள் இருந்த பீரோ, கட்டில், மரப்பெட்டி மற்றும் சாமான்கள் எரிந்ததால் புகைமூட்டம் வெளியே வந்தது. உடனே ஊர் மக்கள் ஓடி வந்து பாத்திரங்களில் தண்ணீர் எடுத்து வந்து ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீயை அணைக்க முடியாததால் உளுந்தூர்பேட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

தீயணைப்பு நிலைய அலுவலர் ஜமுனாராணி தலைமையிலான வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். எனினும் வீடுகளில் இருந்த 12 பவுன் நகை, ரூ.58 ஆயிரம் ரொக்கம் மற்றும் தானியங்கள், பாத்திரங்கள், பட்டாக்கள், குடும்ப அட்டைகள் உள்ளிட்டவை முற்றிலும் எரிந்து சாம்பலானது. இதன் சேத மதிப்பு ரூ.5 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

தீ விபத்துக்கான காரணம் பற்றி எலவனாசூர்கோட்டை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் புகைப்பட்டி கிராமத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com