உளுந்தூர்பேட்டை அருகே தம்பதியை தாக்கி நகை-பணம் பறிப்பு

உளுந்தூர்பேட்டை அருகே தம்பதியை தாக்கி நகை-பணத்தை பறித்துச் சென்ற 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
உளுந்தூர்பேட்டை அருகே தம்பதியை தாக்கி நகை-பணம் பறிப்பு
Published on

உளுந்தூர்பேட்டை,

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள தொழுதூரை சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி அருணா (வயது 24). வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த சேகர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அருணா, விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே அயன்குஞ்சரத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு செல்ல வேண்டும் என்று சேகரிடம் கூறினார்.

இதையடுத்து கணவன்-மனைவி இருவரும் ஒரு மோட்டார் சைக்கிளில் அயன்குஞ்சரத்துக்கு புறப்பட்டனர். இரவு 10 மணி அளவில் உளுந்தூர்பேட்டையை அடுத்த புகைப்பட்டியில் உள்ள ஏரிக்கரை அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களை பின் தொடர்ந்து 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர், சேகரின் மோட்டார் சைக்கிளை வழிமறித்தனர்.

இதையடுத்து சேகர் மோட்டார் சைக்கிளை நிறுத்தினார். அப்போது அந்த 6 பேரும் சேகரையும், அருணாவையும் தாக்கினர். பின்னர் அவர்கள் அருணாவின் கழுத்தில் கிடந்த 6 பவுன் நகை மற்றும் வெள்ளி கொலுசுகள், சேகரிடம் இருந்த ரூ.4 ஆயிரம், 2 செல்போன்களை பறித்து விட்டு, தாங்கள் வந்த மோட்டார் சைக்கிள்களில் ஏறி அங்கிருந்து தப்பி சென்றனர். பறிபோன நகை, செல்போன்கள், வெள்ளி கொலுசுகளின் மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து சேகர், போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் உளுந்தூர்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன், இன்ஸ்பெக்டர் சாகுல்அமீது ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, சேகர், அருணாவிடம் விசாரித்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் எலவனாசூர்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை-பணத்தை பறித்து சென்ற 6 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். 6 பேர் கொண்ட கும்பல் தம்பதியை தாக்கி நகை-பணத்தை பறித்துச்சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com