உப்புக்கோட்டை அருகே, வகுப்பறை கட்டிடம் இல்லாததால் மாணவ-மாணவிகள் அவதி

உப்புக்கோட்டை அருகே வகுப்பறை கட்டிடம் இல்லாததால் மாணவ-மாணவிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
உப்புக்கோட்டை அருகே, வகுப்பறை கட்டிடம் இல்லாததால் மாணவ-மாணவிகள் அவதி
Published on

உப்புக்கோட்டை,

உப்புக்கோட்டை அருகே உள்ள குண்டல்நாயக்கன்பட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 200 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். 11 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இங்குள்ள வகுப்பறை கட்டிடம் சேதமடைந்ததால் சமீபத்தில் இடிக்கப்பட்டது.

தற்போது உள்ள மாணவ-மாணவிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப வகுப்பறை கட்டிடங்கள் இல்லை. மேலும் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் தொடங்கப்பட்டு இருப்பதால் இடவசதி இன்றி மாணவ-மாணவிகள் தவிக்கின்றனர். இதனால் அங்குள்ள சமுதாயக்கூடம் வகுப்பறையாக மாற்றப்பட்டுள்ளது.

மேலும் திறந்த வெளியில், மரத்தடியில் அமர வைத்து மாணவ-மாணவிகளுக்கு பாடம் நடத்தும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. அதே சமயத்தில், திருமணம் மற்றும் காதணி விழாக்கள் சமுதாயக்கூடத்தில் அவ்வப்போது நடைபெறுகிறது. அந்த நாட்களில், மாணவ-மாணவிகள் அமர இடமின்றி அவதிப்பட்டு வருகின்றனர்.

இதேபோல் மழை பெய்தால் மரத்தடியிலும் அமர முடியாமல் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். பள்ளியின் சத்துணவு கட்டிடத்தின் மேற்கூரை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் மதிய உணவு சமைக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். கழிப்பறை வசதி இல்லாததால் ஆசிரியர்களும், மாணவர்களும் சிரமம் அடைந்து வருகின்றனர்.

இதுதொடர்பாக பல்வேறு துறை அதிகாரிகளிடம், 10-க்கும் மேற்பட்ட மனுக்களை மாணவர்களின் பெற்றோர் கொடுத்து விட்டனர். இருப்பினும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. எனவே மாணவ-மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு புதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com