ஊத்துக்கோட்டை அருகே இறந்தவரின் உடலை வயல்வெளியில் எடுத்து சென்றதை தடுத்த விவசாயிகள் சுடுகாட்டுக்கு பாதை அமைக்க கோரிக்கை

ஊத்துக்கோட்டை அருகே இறந்தவரின் உடலை வயல்வெளியில் எடுத்து சென்றதை விவசாயிகள் தடுத்து நிறுத்தினர். சுடுகாட்டுக்கு பாதை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
ஊத்துக்கோட்டை அருகே இறந்தவரின் உடலை வயல்வெளியில் எடுத்து சென்றதை தடுத்த விவசாயிகள் சுடுகாட்டுக்கு பாதை அமைக்க கோரிக்கை
Published on

ஊத்துக்கோட்டை,

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள பேரன்டூர் ஊராட்சிக்கு உட்பட்ட எல்லம்பேட்டையில் 40 குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கிராம எல்லையில் சுடுகாடு உள்ளது. கிராமத்தில் யாராவது மரணம் அடைந்தால் சுடுகாட்டில் தகனம் செய்வது வழக்கம். ஆனால் சுடுகாட்டுக்கு பாதை இல்லாததால் வயல்வெளியில் எடுத்து செல்லும் அவலம் தொடர்கிறது. இப்படி வயல்கள் வழியாக இறந்தவர்களின் உடலை எடுத்து செல்லும்போது அதன் உரிமையாளர்கள் தகராறில் ஈடுபடுகின்றனர்.

சுடுகாட்டுக்கு பாதை அமைத்து தரக்கோரி இந்த பகுதி பொதுமக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகம், ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகம் மற்றும் எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகம் போன்றவற்றில் கோரிக்கை மனு அளித்தும் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று அந்த கிராமத்தை சேர்ந்த லட்சுமி (வயது 70) என்ற மூதாட்டி இறந்தார். அவரது உடலை வயல் வழியாக சுடுகாட்டுக்கு எடுத்து செல்லும் போது விவசாயிகள் சிலர் தடுத்து நிறுத்தியதால் அங்கு மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. கிராம பெரியவர்கள் சமரசம் செய்த பின்னர் மூதாட்டியின் உடல் சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது. இதுபோன்ற சம்பவங்கள் தொடராமல் இருக்க மாவட்ட நிர்வாகம் சுடுகாட்டுக்கு உடனடியாக பாதை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com