வள்ளியூர் அருகே வக்கீலை தாக்கிய சம்பவம்: துணை சூப்பிரண்டு உள்பட 8 போலீசார் மீது வழக்கு சி.பி.சி.ஐ.டி. நடவடிக்கை

வள்ளியூர் அருகே வக்கீலை தாக்கிய சம்பவத்தில் துணை போலீஸ் துணை சூப்பிரண்டு உள்பட 8 போலீசார் மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வள்ளியூர் அருகே வக்கீலை தாக்கிய சம்பவம்: துணை சூப்பிரண்டு உள்பட 8 போலீசார் மீது வழக்கு சி.பி.சி.ஐ.டி. நடவடிக்கை
Published on

நெல்லை,

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே பழவூரை அடுத்த மாறன்குளத்தைச் சேர்ந்தவர் ராஜரத்தினம் என்ற செம்மணி. வக்கீலான இவர் கூடங்குளம் அணு உலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களில் பங்கேற்றவர்களின் வழக்குகளில் ஆஜராகி வந்தார்.

இவர் கடந்த 2017-ம் ஆண்டு யாக்கோபுரத்தை சேர்ந்த செல்வகுமார் என்பவர் மீது பணகுடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். ஆனால் அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யாததால், இதுகுறித்து வள்ளியூர் கோர்ட்டில் முறையிட்டு, வள்ளியூர் துணை போலீஸ் சூப்பிரண்டு குமார், இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் ஜோன்ஸ் ஆகியோர் மீது வழக்கு தொடர்ந்தார்.

இதையடுத்து கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் இரவில் வக்கீல் செம்மணியின் வீட்டுக்கு சென்ற போலீசார், அவரை விசாரணைக்காக அழைத்தனர். செம்மணி வர மறுத்ததால், அவரை வீட்டில் இருந்து இழுத்து வந்தனர். அப்போது செம்மணியின் மனைவி வீடியோ எடுக்க முயன்றபோது, அவரது செல்போனை போலீசார் பறித்ததாக கூறப்படுகிறது.

பின்னர் செம்மணியை போலீசார் கைது செய்து, வேனில் ஏற்றிக்கொண்டு ராதாபுரம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு வக்கீல் செம்மணியை போலீசார் தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர் அவரை உவரி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றும் தாக்கியதாக கூறப்படுகிறது.

எந்தவிதமான வழக்கும் இல்லாமல் வக்கீல் செம்மணி கைது செய்யப்பட்ட சம்பவம் வக்கீல்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து வக்கீல்கள், வள்ளியூர் நீதிபதியிடம் முறையிட்டனர். நீதிபதி உத்தரவின் பேரில், 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அவர்கள் செம்மணியை மீட்க, உவரி போலீஸ் நிலையத்துக்கு சென்றனர்.

அங்கு செம்மணியின் இடது கால் எலும்பு முறிவு ஏற்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் இருந்தார். வக்கீல்கள் செம்மணியை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். தொடர்ந்து வக்கீல்கள், செம்மணியை தாக்கிய போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து வள்ளியூர் போலீஸ் துணை சூப்பிரண்டு குமார் இட மாற்றம் செய்யப்பட்டார். பணகுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் ஜோன்ஸ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். எனினும் செம்மணி போராட்டத்தை கைவிடவில்லை. தொடர்ந்து மதுரை கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார். கோர்ட்டு உத்தரவுப்படி சி.பி.சி.ஐ.டியின் ஒரு பிரிவான நெல்லை மாவட்ட ஒருங்கிணைந்த குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் துணை போலீஸ் சூப்பிரண்டு குமார், இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் ஜோஸ், பழவூர் சப்-இன்ஸ்பெக்டர்கள் விமல்குமார், முகமது சம்சீர், ராதாபுரம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பழனி, போலீஸ்காரர்கள் செல்லத்துரை, சாஹர், ஜோஸ் ஆகிய 8 போலீசார் மீது கொலை மிரட்டல் உள்பட 11 பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஸ்டீபன் ஜோஸ் தற்போது ஏர்வாடியில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. போலீஸ் அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com