வாணியம்பாடி அருகே, பெண் கொலை வழக்கில் தி.மு.க. பிரமுகர் கைது

வாணியம்பாடி அருகே செம்மரம் கட்டை கடத்தல் கூலி தகராறில் பெண் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் தி.மு.க. மாவட்ட அவைத்தலைவரை போலீசார் கைது செய்தனர்.
வாணியம்பாடி அருகே, பெண் கொலை வழக்கில் தி.மு.க. பிரமுகர் கைது
Published on

வாணியம்பாடி,

திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் அருகே பூங்குளம் கிழக்கத்திவட்டம் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 28). இவர் கடந்த நவம்பர் மாதம் அதே பகுதியை சேர்ந்த இளையராஜா (33), இளையகுமார் (30), க.பழனி, பூ.பழனி, சென்றாயன், கிருஷ்ணமூர்த்தி, சஞ்சய் ஆகிய 7 பேரை ஆந்திர பகுதிக்கு காட்டில் செம்மரம் வெட்ட அழைத்து சென்றுள்ளார். பின்னர் அதற்கான கூலியை 7 பேருக்கும் தராமல் சீனிவாசன் காலம் கடத்தி வந்துள்ளார்.

இதனால் கடந்த டிசம்பர் 3-ந் தேதி கூலி கேட்டு சீனிவாசனுக்கும் 7 பேருக்கும் மற்றும் அவர்களுடன் வந்த சிலருடன் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட கைகலப்பில் வீட்டிலிருந்த சீனிவாசனின் மனைவி சாந்திபிரியா (25), தாய் மல்லிகா(45) ஆகியோர் வந்து தடுக்க முயன்றபோது அவர்களும் தாக்கப்பட்டனர். இதில் மயங்கி விழுந்த சாந்திபிரியா, மல்லிகா ஆகியோரை அருகிலிருந்தவர்கள் மீட்டு ஆண்டியப்பனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு டாக்டர் பரிசோதித்து சாந்திபிரியா ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளார்.

மேலும் மல்லிகா திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து ஆலங்காயம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜனார்த்தனன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி இளையராஜா, பழனி, கிருஷ்ணமூர்த்தி ஆகிய 3 பேர் உள்பட 6 பேரை ஏற்கனவே கைது செய்திருந்தனர். மேலும் வேலூர் கோர்ட்டில் வெங்கடேசன் என்பவர் சரணடைந்தார்.

போலீசார் இந்த வழக்கு தொடர்பாக ஆலங்காயத்தை அடுத்த பூங்குளம் கிராமத்தை சேர்ந்த பி.எம்.முனிவேல் (50) என்பவரை விசாரணைக்காக போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். பின்னர் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைக்கு பின்பு அவரை கைது செய்தனர். இவர் தி.மு.க. வேலூர் மேற்கு மாவட்ட அவைத்தலைவராக உள்ளார்.

பெண் கொலை வழக்கில் தி.மு.க. பிரமுகர் கைது செய்யபட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com