விஜயாப்புரா அருகே, 10-ம் வகுப்பு கணித தேர்வுக்கான வினாத்தாள் வெளியானதால் பரபரப்பு - மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

விஜயாப்புரா அருகே 10-ம் வகுப்பு கணித தேர்வுக்கான வினாத்தாள் வெளியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில், தொடர்புடைய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
விஜயாப்புரா அருகே, 10-ம் வகுப்பு கணித தேர்வுக்கான வினாத்தாள் வெளியானதால் பரபரப்பு - மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
Published on

பெங்களூரு,

கர்நாடகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த 21-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று கணித தேர்வு நடைபெற்றது. இந்த நிலையில், விஜயாப்புரா மாவட்டம் சிந்தகி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நேற்று காலை 11.30 மணியளவில் கணித தேர்வுக்கான வினாத்தாள் வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியாகி பரவியது.

இதுபற்றி அறிந்ததும் கல்வித்துறை அதிகாரி பிரசன்னகுமார் சிந்தகிக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். அப்போது சிந்தகி அருகே மோரடகி கிராமத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் இருந்து தான் கணித தேர்வுக்கான வினாத்தாள் வெளியானது என்பது தெரியவந்தது.

அதே நேரத்தில் தேர்வு தொடங்குவதற்கு முன்பு வினாத்தாள் வெளியாகவில்லை என்பதையும், தேர்வு தொடங்கிய பின்பு தான் வினாத்தாள் வெளியானதும் உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஆனால் வினாத்தாள் எப்படி வெளியானது? என்பது தெரியவில்லை.

அதே நேரத்தில் சிந்தகி தவிர மாநிலத்தில் எந்த பகுதியிலும் கணித தேர்வுக்கான வினாத்தாள் வெளியாகவில்லை என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சிந்தகி போலீசார் வழக்குப்பதிவு செய்து வினாத்தாள் வெளியாக காரணமான மர்மநபர்களை வலைவீசி தேடிவருகின்றனர். இந்த சம்பவம் சிந்தகியில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com